இன்னொருத்தியின் கணவன்....



அந்நியனைப்   போல
கணவனை சந்திக்கும் கொடுமை
எந்த மனைவிக்கும் வரக்கூடாது.
எங்கேயோ பார்த்த முகமாக
தொலைந்திருந்தது -அந்த
வாழ்வு தந்த(ளி)ழித்த முகம்.

அவனின் கண்களில் ஒளியில்லை.
வாழ்வின் எல்லைகளைப் புரிந்திட்ட
பக்குவத்தில் அமைதி போர்த்திருந்தான்.
புன்னகைகள்  புதைத்திருந்தன.

காதலித்த அதே கண்கள் தான்
இன்றும் அவனைப்பார்க்கிறது.
பார்வையில் வித்தியாசங்கள்
மிகுதியாய்.......இடைவெளியாய்....

அமைதிசூடிய குரல்
அவனோடு உரையாடியது.
"நல்ல கணவனாய் வாழத்தெரியலை
நல்ல அப்பாவாக வாழ்ந்து விடுங்கள்."
பேசவோ திட்டவோ அவள் உரிமை எடுக்கவில்லை.
அந்த உரிமையை எடுக்கவும்
அவள் தயாரில்லை.

குழந்தைப் பருவத்தில் அவளும்
தாய் தந்தையை இழந்தவள் தான்.
இல்லாத தந்தை தாய்
ஏக்கத்தின் வலிகளை
சுமந்தவள் தான்.
அப்பாவோடு தோளாடும்
குழந்தைகளை ஏக்கத்தோடு
பார்த்த விழி அவளது.

"இங்கு அப்பா இருந்தும் இல்லாத நிலை.
இந்தப் பருவம் இந்தக் காலம்
இனி வரப் போவதில்லை.
"நல்ல அப்பாவாக வாழக்
கற்றுக் கொள்ளுங்கள்"
அவளின் வேண்டுதல்கள் கேட்கப்பட்டது.

அவளின் நியாயங்கள்
அவன் இருதயத்தை நனைத்தன.
மடைதிறந்த வெள்ளமாய்
இருகரங்களால் கண்பொத்தி
விம்மி விம்மி  குழந்தையாக அவன்
அழத் தொடங்கினான்.

அவனின் அழுகையை அவளும்
தாங்க மாட்டாள்.
அவன் கலங்கிய காலங்களில்
தலைகோதி முத்தமிட்டவள் தான்.
மடிகொடுத்து ஆறுதல் படுத்தியவள் தான்.
ஆனால் இன்று அந்த
அழுகையை பொருட்படுத்தாமல்
திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
ஏனெனில் அவன் இப்போது
இன்னொருத்தியின் கணவன்.

இனி அவளுக்கு கவலையில்லை.
தந்தையின் தோளாடும் பிள்ளைகள்.
அந்தத் தந்தையின் முகத்திலும்
மறுபடி புன்னகை பூக்கும்.
ஒளியிழந்த அவன் கண்கள் ஒளிபெறும்.
"காதல் உடலில் அல்ல" என்பதையும்
அவன் புரிந்து கொள்ளுவான்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija
12: 00 AM

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹