எங்கும் கிடைக்காது இந்தவரம் இனியொருக்கால். 💚💚💚❤💚❤❤❤❤❤



பெருந் தெருவுக்கும்
புகையிரத தெருவுக்கும்
இடைப்பட்டது என் வீடு.
வானமும் வான் தொடும் மரங்களும்
கழனி(வயல்)யும் பொய்கையும்
நிறைந்த எழிலிடம் என் பிறப்பிடம்.

இரும்புச்சில் ஏறிநகரும் பாதையிலும்
விரும்பிப் படர்ந்து பூக்கும் நாணல்கள்.
முற்றத்தை அலங்கரிக்கும்
செவ்வந்தி சீனியாசி.
வேலிகள் தோறும் விரைந்து ஊர்ந்தோடி
தூங்கித் தொங்கும் குடிகாரப் பூக்கள்.

தேமாப் பூக்களை காதுகளில் அணிந்து
தேவதைகள் போல் நடனங்களிடுவோம்.
நாயுண்ணிப் பழமும் நாவுக்குச்  சுவைதரும்.
பூனைப்பழக் கொடிகளில் பழந்தேடிச் சுவைப்போம்.
மைப்பழங்கள் நகங்களை அழகூட்டும்.

பூவரசம் பூக்கள் பொம்மைகளாகி நிற்கும்.
பாவட்டைக் கிளைகளும் பாவாடை உடுக்கும்.
பூவரம் இலை சுருட்டி பீப்பிகள் ஊதுவோம்.
தென்னங் குரும்பைகள்  ஈர்க்கோடி ரதமாகும்
செவ்வரத்தப் பூக்கள் தேரை அழகூட்டும்.
சின்னஞ்சிறு குரல்கள்
அரோகரா சொல்லி சொல்லி
அசையாத சில்லுத்தேரை நூலிட்டு
மண்ணோடு அரைத்திழுப்போம்.

பூக்களை கையிலேந்தி ஒருவர் நிற்க
பூவேந்தியவர் கண்ணை
இன்னொருவர் மூடிப் பொத்த
எவ்விடம் எவ்விடம் எனக்கேட்டு நகரும்
இடமறியும் விளையாட்டு இன்பம் தரும்.
கெந்திக் கோடும் கிளித்தட்டும்
கள்ளன் பொலிஸ் விளையாட்டும்
பள்ளி விட்ட பின் தொடரும்.

வாய்க்கால் கரை எங்கும் பச்சைப்
பொட்டுக்களாய் நிரைந்திருக்கும் வல்லாரை.
ஆம்பலும் அல்லியும் அழகூட்டும் குளக்கரை.
நீச்சல் குளமாகும் வாய்க்கால் நீரோடை
உச்சி வெயில் தெரியாத நீராட்டம் நீளும்
உலகை மறந்த பிள்ளைப் பருவங்கள் பசுமை

இயற்கை அழகோடு காற்றுத் தழுவும்.
களைப்பும் அலுப்பும் தெரியாது
கண்ணுறக்கம் அணைத்து நிற்கும்.
மாலை மயக்கத்தை விடியலென எண்ணி
வெள்ளைச் சீருடையில்
பள்ளிக்கூடம் புறப்படுவோம்.
எள்ளி நகையாடும்
உறவுகளின் சிரிப்பொலிகள் .
கண்ணீரோடு சிரிப்பும்
கலந்து கொட்டும் வெட்கம் தின்னும்.
கண்மூடி  வெட்கத்தை கைபொத்தும்.

எங்கும் கிடைக்காது
இந்தவரம் இனியொருக்கால்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹