Posts

Showing posts from March, 2018

விதவை திருமணம்.

Image
விதவைகளே மறுமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் வெள்ளை ஆடையால் வானத்தைப் போர்க்கும் முட்டாள் தனத்துக்கு விடை கொடுங்கள். வானம் பரந்தது. துவாரங்களால் தேடப்படுகிறது வெண்ணாடையின் வெளிச்சங்கள்.

பிரபஞ்சத்தை உயிரூட்டுவோம்.

Image
உயிர்ப்பு நாளில் தானா இந்த முட்டாள் தினமும் வந்து போட்டியிடனும்? எதனோடு எது போட்டியிடல் என்ற விவஸ்தையே இல்லையா? பிரபஞ்சம் நம்மால் புத்துயிர் பெறட்டும். என் அன்பே! வா அருகில்.... உயிர்ப்பு நாளை உயிரூட்டுவோம். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

நிறக்கண்ணாடிகள்

Image
யாழ் மீட்டும் தெய்வமே. உனக்காக போராடி போராடி தோற்றுப்போன உணர்வுடன். மௌனித்துப் போன மலர்ச்சி இழந்த விழியும் மொழியுமாய் என் பயணம். போலிகளின் வார்த்தைகளை வஞ்ச வலைகளையும் பெரிதென கருதும் உன்னிடம் -எனது வேண்டுதல்கள் செவியேறி நியாயங்கள் வெல்லப் போவதில்லை. என் ஸ்வரங்களை உன் யாழில் மீட்டவும் போவதில்லை. பள்ளிப்பருவத்து உன் துள்ளல் நடையில் மயங்கி ஜீவநதியில் மினுங்கிய உன் விழி தரிசனத்தில் நான் மீள உயிர்த்தது தவறானது.- இப்போ மனமோ பாரப் படையானது கிரந்தம் சூடிய உன் மொழிக்குள் கிரங்கியதும் மகிழ்ந்ததும் பசுமை.-நான் கடந்தோடிய  முட் தடங்களை நீ உணரப் போவதில்லை. சிலுவை சுமந்த நீள் பாதைகளை உன் புலனாய்வு மூளை உணரப் போவதில்லை. வாழ்வதற்காய் போராடிய என் பறப்பின் சிறகுளைவு உன்னால் புரிந்து கொள்வது கடினமே. வல்லரச சதிகளை வென்றாடி வாழத்துடித்த வரலாற்றில் நீண்ட கால ஓட்டத்தை உன்னால் புரிதல் கடினமானது. நீ தரித்த நிறக் கண்ணாடியை கழற்றி நிஜத்தை பார்க்கப் போவதில்லை. மரணத்தை விட கொடிய மௌனத்தை பரிசளித்தாய். உனக்காகப் போராடித் தோற்று உறங்குவேன்  ஒரு மீளா உறக்கம். அப்போதாவது  உன்

நினைவுகளின் ஓட்டம்

Image
என்றும் இணைந்திடாத தண்டவாளங்களை காந்தச் சில்லுகள் ஏறித்தழுவுது. டக் ..டக் ... டொக் ....டொக் ...என்று இரவுக் காற்றிலே மிரட்டும் பூதத்தின் புதிய ராகமாய் இரும்புத் தாளங்களிலும் விழிகள் தம்மை மறந்து தழுவுது உறக்கத்தை. தலைவிரி கோலமாயும் கரும் பூதங்களின் தலை தெறித்த ஓட்டமாயும் மரங்களும் ஓடுது. வான் நிலவும் ஓடுது. மேகங்களும் ஓடுது. புகையிரதமும் ஓடுது முன்னோக்கி... மனமும் ஓடுது.... பின்னோக்கி... பிள்ளைப் பருவத்தில் வேண்டாம் பேருந்துப் பயணம் என அடம் பிடிப்பேன்.-அந்த அடத்துக்கு பொருள் காண அம்மா பட்ட பாடு ஏராளமே. பேருந்து ஒருபக்கம் சரிந்தோடினால் நான் மறுபக்கம் ஓடிக் குதிப்பேன். எந்தன் ஓட்டமும் ஆர்ப்பாட்டமும் பேருந்துப் பயணிகளுக்கு தொல்லை தொல்லை. அம்மா ஆத்திரத்தில் அடி போட்டுக் காரணம் கேட்டதற்கு அன்று எந்தன் மழலை அறிவு இதுவானது.. "பேருந்து ஒருபக்கம் சரியுதென்றால் அங்கு பாரம் கூடிச் சரியுதம்மா. நான் மறுபக்கம் துள்ளிக் குதித்தால் பாரம் சமப்பட்டுப் போகுமம்மா." அழுதமுகம் துடைக்காமலே அம்மா ஆரத்தழுவியென்னை முத்தத்தால் நனைத்து நின்றாள். அடித்த நோவ

நிலாச்சோறு.

Image
இரவை அழகூட்டும் முழுநிலா அற்புத விளக்காக..... வானிடை மெல்லிய ஒளி ஏந்தி இயற்கைக்கு சந்தணம் பூசிநிற்கும். அருவியாய் மேவி மேவி -முகில் அலைகள் ஓடித்துள்ளும். நட்சத்திர மீன்களாக உடுக்கள் கண்சிமிட்டிக் காதல் செய்யும். வானின் அற்புதங்கள் காட்டிக் காட்டி அம்மா நிலா ஒளியில் சோறூட்டுவாள்.-நான் வெண்மணல் மீதிலே நல்ல வீடுகள் அமைத்திடுவேன். ஒரு பொன்விழாப் புன்னகையாய் புவியும் பூரிப்பில் குளிர்ந்திருக்கும். அம்மா இடுப்பிலும் கையிலுமாய் என்னை இறுக்கிப் பிடித்ததில்லை. ஒரு சுதந்திரப் பறவையாக- அந்தப் பெருவெளி முற்றமெங்கும் சிட்டாய் பறந்துமே ஓடிடுவேன். ஒரு கவளச் சோறுண்டிட நான் செய்யும் பெரும் விளையாட்டு அவஸ்தைகளை ஒரு விளையாட்டு நிகழ்வாக்கியே அம்மா வெற்றிகள் கண்டு நிற்பாள். நல்ல விளையாட்டாய் அமையுமந்தப் பொழுதுகளும் பேரின்பமே. எந்தன் அம்மாவைப் போலவே தான் இன்று அமைதியாய் நான் வெல்கிறேன். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா.

மௌனம் அழகு மொழி

Image
மௌனம் காதலில் அழகான பரிபாஷை. மனதோடு பேசி கீச்சுகிச்சு மூட்டும் மந்திர உச்சாடணம். காதல் பறவைகளின் கன்னியமான கோப ஒத்திகை. உருவின்றித் தழுவும் மெய் அன்பின் முன்னோடிப் பரீட்சை. தவறுகளைப் புடம்போட்டு ஒளிர வைக்கும் பொற்சூளை. இயற்கை அழகில் மனங் கவர்ந்தாரை கலந்தள்ளும் அழகியல் உணர்வு. நெருங்கி நெருங்கி நெருப்பிட்டு குளிர்த்தி செய்யும் இயற்கை வினோதம். மௌன மொழியின் சுதந்திரச் சிறகுகள் யாருக்கும் தெரியாமல் விரிந்து குறுகி மலை(ழை)ச்சாரலில் நீராடும் அகமொழி. தித்திக்கும் மெய்யோடு உரசி உணர்வில் பசித் தீ மூட்டும் சிக்கிமுக்கி கல் மௌனம் அழகிய காதற்பரிசு. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

காதல் விலைமதிப்பற்றது.

இதயமே நீ என்றும் காதலித்துக்கொண்டிரு இனிய நினைவுகளை... இனி வரும் சவால்களை... இதமான தென்றலை... இரவின் நிசப்தத்தை.. காற்றில் மலரும் கீதத்தை... காதலி காதலி காதலி தேசத்தை மொழியை... அமாவாசை இருளை.... ஆர்ப்பரிக்கும் கடலை.... இதயமே நீ என்றும் காதலித்துக் கொண்டிரு நீரோக்களாய் பிடில் வாசிக்காது நிதர்சனம் உணர்ந்து காதலி. பார்த்துப் பார்த்துப் பூப்பது காதல்.. தோற்றுப் போதல் காதலுக்கில்லை. தோற்றால் அது காதலுமில்லை. காதலுக்காய் காத்திரு.. வெட்கப்படாமல் காத்திரு... மதகுகளில் தெருக்களில் அல்ல காத்திருப்பு மனதோடு....முழுமனதோடு... காதல் என்று தெருத்தெருவாய் அலையாதே! காதல் அலைச்சல் அல்ல. மன உளைச்சல் அல்ல. இமைகளைப் பார் இரு விழிகளைப்பார் ஒன்றை ஒன்று பார்த்ததில்லை. பாசத்திலும் குறைந்ததில்லை. பார்க்காத விழிக்கிருக்கும் பக்குவ நிலை பார்த்துப் பார்த்து பூத்த காதலுக்கு உதிர்ந்திடுமா? விட்டுக்கொடு.... விட்டுக் கொடு விலை மதிப்பற்றது காதல். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

பூக்களின் மெல்லிசை.

Image
அடர்ந்த காடும் அனல் நிறைந்த இருளும் நிசப்தங்களை சல்லடையிட்டு நெஞ்சைப் பிளக்கும் அநாமதேய ஒலிகளும்..... ஏதேதோ பயத்தை விதைத்தது. தேக மரப் பொந்தில் பதுங்கிய வாழ்தல் பறவையின் இடைவிடாத பற்றிப்பிடிப்பில் ஒரு வெளிச்சக் கீற்றை தேடித் துலாவியது மனச்சிறகு.... தவழ்தல்..... ஊர்தல் ....என தளராத நீள்பயணத் தேடலில் இரத்தமும்  நிறமற்று இருளோடு இருளாய்...... இடைவிடா நகர்வு.... இடைவிடா முயற்சி.... இருந்தும் ஒளியில்லை வாழ்வோ வலிகளின் முனகலாய்... நம்பிக்கைச் சிறகை அசைத்தது மனது. இதோ... இதோ.... ஒரு பிடிமானம். தட்டுத்தடுமாறி தடவிய தேடலில் கையில்  உராய்ந்த -அந்த கரும்பாறைப் போர்வையைப் பற்றி சற்று எட்டி எக்கி தலை நிமிர்த்த போது கூனல் பிறையொளியின் குவிந்த சிரிப்பில் அக்கரை தெரிந்தது அழகாய்... ஆற்றோடு ஒரு அழகிய தீவு அங்கே அழகான பூங்கொடிச் சோலை-அவை வதனங்கள் தலையாட்டி அழைக்க சித்தம் மறந்தாங்கு அருகிடைப் போனேன். அவை மெல்லிசை பாடின காதில் "கவிஞனுக்கு மரணமில்லை மரணமில்லை என்று......" வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

பிறைநிலாவில் நகருலா

Image
---------------------------------------------- பிறைநிலாத் தேரேறி உன்னோடு நகருலா வர வேண்டும்-இந்த வானக் கடல் வீதியில். கொடிமலர் ஓடிப்பூத்த விண்மீன் கொய்துன் கார்குழலில் -வீர வாகைப் பூச்சரமாய் சூடி நான் மகிழ வேணும். சில்லெனச் சிறகடித்து நெஞ்சைக் கொல்லும் உன் கண்ணழகில் பட்டாம் பூச்சியாகி சுற்றிப் பறந்திட வேணுமெல்லோ. தொட்டனைத்தூறும் உந்தன் முத்தத்து நீர்ச்சரத்தை தென்றலும் திருடிடாது நல்ல மேகத்திரையிழுத்து மூடி மெல்லப் பருகிடணும். எந்தன் ஆவி திருடி விட்டு ஏதும் தெரியாத ஆளாக நீ பார்க்கும் பார்வையிலே பிறைநிலா நாணிக் குதித்தோடுமே. இந்த வானும் மயங்கியொரு இன்ப நாதமாய் மழைதூவ நல்ல நகருலப் போகணும் நாம் இந்தப் பிறைநிலாத் தேரேறி. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா 1:55 PM குறிப்பு: இங்கு பிறைநிலா தேராகவும் ஓடமாகவும்.