Posts

Showing posts from April, 2018

மனதின் தேடல்....

Image
மழைக் குணமா இருக்குது. குடையைத் தேடுது மனது.. குளிர் தாங்க முடியவில்லை கம்பளிப் போர்வையை தேடுது மனது... கட்டிலின் கால்கள் இறுக்கம் குறைந்து கண்டபடி சரிஞ்சாடுது. ஆணியையும் சுத்தியலையும் பரபரத்து தேடுது மனது... சிறுகுடலைத் தின்று விடுவது போல் பெருங்குடலின் புறுபுறுப்பு உணவைத் தேடுது மனது..... முகத்தின்  அழகை சரிபார்க்க நிலைக்கண்ணாடியைத் தேடுது மனது.... நல்லதை  வாசிக்க நல்ல புத்தகத்தை தேடித் துலாவுது மனது.... கேட்கவும் உணர்த்தவும் உணரவும் மொழியைத் தேடுது மனது.... தேடல் தொடர்கிறது  நதியைப் போல காற்றைப்போல ஓடிக்குதித்து ஆடி அசைந்து... வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha kanthaija

முள்ளாய் குத்தும் முள்வேலிகள்

Image
நீறுபூத்த தணல்களாய் நினைவுகள்............ கண்ணீரின் கொந்தளிப்புக்கள் சுடுநீரின் வெம்மையாய்... உயிரைத் திருகும் வதை நிறைந்த வலி...... உக்கி உலர்ந்து எருவானோரின் ஆக்கிரமித்த அழகு மொழி காற்றோடு..... அன்னையின் அமுதத்தைத் தேடும் குழந்தையின் சிறுவிரல்களின் நினைவுத் தழுவல் நெஞ்சோடு....... மூடிய சுவருக்குள் நசுங்குண்டு மெய்யிடிந்து ஒப்பாரியிடும் கதறல் மழையோடு கரைந்த இடிமின்னலாய்.... ஏதிலராய் போன வாழ்வின் துடிப்பில் எழுதப்படாத காவியங்களின் நீட்சி ஓவியனுக்குத் தூரிகையற்ற நிலையாய்.... நொடிப்பொழுதில் மூச்சிழந்து புதையுண்டோரின் வாழ்நாள் வலி ... ... நெஞ்சுக் கூட்டுக்குள் நெருப்போடு நெடும் பயண யாத்திரையாய்..... வன்னி யுத்த அவலச் சகதி குருதியும் பிணமும் மணமுமாய்.... கந்தக நொடியும் கண்ணீர்க் கதைகளும் நீதி கேட்டிரங்கும் அலையடிப்பாய் .... இன்னும் இரங்காத இரட்சகர்கள் உள்ளும் வெளியுமாய் தந்திர மேய்ப்பராய் ஆண்டுகளை இழுத்தடிக்கும் கள்ளத்தனம். கண்ணீரோடு கட்டித்தழுவி சரணடைய கண்காண அனுப்பினோரை காணமல் போனோர் என பொய் உரைக்கும் நரித்தந்திரம்.... மன்னாரில் தொடங்கி முள்ளி

ஆதிமனிதர்கள் அதிஸ்ரசாலிகள்.

Image
ஆதிமனிதர்கள் அதிஸ்ரசாலிகள். காய்கனி கிழங்கினை உண்டான். விலங்கு மாமிசம் ருசித்தான். காடும் களனியும் வீடானது ஆடை பற்றிய அவஸ்தை இல்லை. காற்றோட்ட சுகத்தோடு ஏகாந்த இன்பம்.. ........ அடடா!!!!! யாருக்கு முதலில் ஆடைக் கனவு வந்ததோ? எதற்காக வந்ததோ? நிச்சயமாக மானம் என்பதை என் ஆதிக்குலத்தோன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. குளிரும் வெயிலும் அவனைக் குத்தியபோது வாழ்விடத்தன்மைக்காய் தன்னை வசப்படுத்தலானான். கிடந்ததை அணைத்து ஆடையாக்கினான். ஆடை நாகரிகம் வாழ்விடத்தை வரிந்து கூறியது. வளர்ச்சி வளர்ச்சி என்று ஆதிமனிதனை புறமொதுக்கிய நாகரீக மனிதர்களுக்கு ஆடையால் வந்தது அவஸ்தை. மூடு என்கிறான் ஒருவன் மூடாதே என்கிறான் மற்றவன். சுற்று என்கிறான் ஒருவன். சுற்றாதே என்கிறான் இன்னொருவன். ஆடைதானாம் காம மருந்தென ஆலட்டல்களும் அலம்பல்களும். மூடிக்கட்டிவிட்டால் உணர்ச்சிகள் உறங்கிடுமா? ஆடைக் குறைப்பால் உணர்ச்சிகள் பூத்திடுமா? வார்ப்பும் வளர்ப்பும் சரியாக இருந்தால் சரியாகும் எல்லாமே. வெற்றுமேனியோடு காற்றாடும் ஆணைக்கண்டு பெண் காம வெறிகொண்டு கொத்திக் குதறுவதில்லையே... அப்படி ஒரு நிலை

எனக்கென்று வீடு வேணும்.❗

Image
எனக்கென்றொரு வீடு வேணும். மாடமாளிகையோ.... ஏழைக்குடிசையோ.... எனக்கென்றொரு வீடு வேணும். சுற்றயல் நிறைய பச்சய மரங்கள் குடைபிடித்து குளிர் காற்றுத் தர வேணும். குளமோ குட்டையோ நீர்ச்சுனையோ ஒரு நீர்த்தடாகமும் நிறைந்திருக்க வேண்டும். சில்வண்டுச் சுருதியும் அணில்பிள்ளை நாதமும் விடிகாலை கரைந்தெழுப்பும் காகத்தின் பாடலும் செட்டையடித்து வீரக்கூவலிடும் சேவலின் சங்கு ஓசையும் கிளிகளும் குருவிகளும் மகிழ்ந்து பேசும் பாஷையும் வட்டமிட்டு வண்ணங்காட்டும் தேனிக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் நிறைந்த ஒரு சோலையிலே அழகாய் எனக்கென்று ஒரு வீடு வேணும். அள்ளி இறைத்த மடைவெள்ள நீராக தெள்ளுதமிழ்மொழியே காதில் தேனாய் சுவை ஊட்ட வேண்டும். மாமனோ மச்சானோ யார் எந்தன் உறவினனோ யாராக இருந்தாலும் விருந்துக்கும் சுக துக்கத்துக்கும் அளவோடு தங்கி விடைபெறும் மனித வெக்கை இல்லாத சுவாத்தியம் நிறைந்த வீடு வேண்டும் எனக்காக.... என் பெயரை என் வீடு தாங்கி நிற்க வேண்டும். தபால்காரன் அறிந்து வரும் முகவரியும் வேண்டும். அமைதியான ஓவியமாய் எந்தன் வீடு திகழ வேண்டும். தமிழ் சொந்தங்கள் அயலவராய் நிறைந்திருக்க வ

புலர்வின் புதுமை

Image
நீ வந்தால் தான் உள்ளத்தில்  அதிகாலை விடியல். உன்னைத் தொழுதால் தான் ஒளிசூடும் விழிகள். தூரத்தில் நின்று பூமியின் காதல் நரம்புகளை  மீட்டும் சூரியோதயம் நீ. கிட்ட நெருங்கினால் மத்திய கோட்டை  சுட்டெரிக்கும் சூரியனாய் உன் செயல்கள். மாலையில் சமரசக் காதல் மொழிந்து அலங்கரிக்கும் அந்திச் செவ்வானமாய்  நாணம் பூசிய  வசீகரிப்பு. கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் நீருக்குள் முக்குளித்து  புவிக்குள் புதையும் சூரிய மயக்கமாய் மனத்தணல்களை மூடி மூழ்கிறாய்.💙 மீண்டும் ரசணை... அதிகாரம் ...... திமிர்வாதம்....... வாய்வாதம்........ சமரசத்தோடு உன்...சுற்றுகை.   புலர்வின் புதுமை அதிபதி நீதான். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

இழந்தவைகளை எண்ணி வருந்திப் பாட மனமில்லை.

போர் அவலம் காணாத சொகுசாய் வாழ்ந்த கயவர்கள் சிந்திய குருதியை............. சிதறிய உயிர்களை.................... தியாகங்களைக்..... கண்ணீரை செய்திப் பொருளாக்கி செய்தித் தாளை அலங்கரிக்கும் அவலத்தை அடிக்கடி பார்ப்பதால் இழந்தவைகளை எண்ணி வருந்திப்பாட  மனமில்லை. இழந்தவர் துயரதை அலங்காரக் கதிரைக்கு அலங்காரம் ஆக்கினார். இழந்தவரை ஏலம் விட்டு ஏந்திப் பிழைக்கும் அடிமைகள் இவர்கள். வீர முழக்கமிட்டு ஆவேச அபிநயம் அடிக்கடி காட்டி அலங்கரிப்பர் நாளிதழை. ஆர்வலர்கள் கொட்டிக் கொடுக்கும் வெள்ளிப் பணத்திலே சொகுசு வாகனமும் சுகபோக விருந்துமாய் காலத்தை உருட்டும் வினோதப் பிறவிகள். தம்மோடு ஒட்டி உறவாடுவதிலும் ஒரு கெட்டித்தனம் வைப்பர். அவர்கள் திருகிவிடும் திசையெங்கும் தலையாட்டும் பொம்மையர்க்கும் அவர்களைத் துதிபாடி மகிழ்வோர்க்கும் பதவி கொடுத்தொரு கொலுபொம்மையாக்கி சுகம் காண்பார். நியாய தர்மங்கள் நீதியுரை மொழிவோரை எதிரியாய் புறம் தள்ளிப் புன்னகைப்பர். மேடைகளில் நெற்றிவியர்வை சிந்த நெடும்பாவாய் பேச்சுரைப்பர். பேசிய பேச்சினால் களைத்து கறுத்தவர் நாவிலே சுவையூற சிற்றுண்டிகளை பேருண்டிகளுக

பாரபட்சம் 😂😂😂😰😰

Image
சிந்துவெளியின் முந்தைக் கடவுள்களே! எங்கள் முகாரி ராகம் உங்கள் சிந்தையில் பதியாதோ? பாம்பை கழுத்திலேற்றி கூத்தாடும் கூத்தனுக்கு எங்கள் வாழ்வோடும் கூத்திடல் முறைதானோ? நஞ்சைத்தின்றவனினன் கண்டத்தை அஞ்சி அணைத்தவளுக்கு எங்கள்வாழ்வில் நஞ்சாய் உமிழ்ந்து உயிர்குடித்தவரின் குண்டுகளை ஏந்தி காத்திடத் தெரியல. பேரண்டத்தைப் பேழை வயிற்றில் சுமந்து பெரும்பாடு படும் பிள்ளையாருக்கு சின்னனும் பெரிதுமாக சிதறிப்போனவரின் சிறிய இடத்தின் உயிர்களைக் காக்கத் தெரியல. மயிலேறி மாம்பழத்துக்காக பறந்து உலகைச் சுற்றியவருக்கு மண்ணில் பசியோடு பலர் வாடும் உண்மை நிலை தெரியுதில்லை. நல்ல நகையணிகலன் பூண்டு நளினம் காட்டும் பெண் கடவுளர்க்கு கையெடுத்து கும்பிட்டு எனக்கும் தா என மன்றாடும் ஏழைப் பெண்களின் ஏக்கம் தெரியுதில்லை. மயிலுக்கு பாம்புக்கு எலிக்கு நாய்க்கு அடித்த பெரும் யோகம் ஒரு ஏழை. மானிடப் பிறவிக்கு இல்லை கேட்டால் மனிதன் கடவுள் படைத்த சிறப்புப் படைப்பாம். சிரிப்பா இருக்குதடா. பாரபட்சம் காட்டும்  கடவுளர்களே..! வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

குறித்துக்கொள் . 🍀🍀🍀

Image
உன்னை மறந்து விட்டதாகத் தான் நீ நினைத்துக் கொள்கிறாய். என்னென்று சொல்வேன் என் இதயத்துடிப்புள்ளவரை உன் நினைவுத் துளிர்ப்புகள் பசுமைதேடும் ஒசோன் படலமாய்... வெப்பத்தைக் கக்கிய உன் வார்த்தைகளை பசுமை வாயுக்கள் போல் இதயம் உறிஞ்சிக் கொண்டதால் நெட்டலைக்கும் குற்றலைக்கும் இடையில் முட்டிக் கொள்ளும் கடும்போர் போல் இதயச் சுவர்களில் தேய்வு நிலை. மௌனமாகி மரணிக்கும் நிலை தந்தாய். ஆயிரம் முறை என் அழைப்பை அசட்டை செய்ததால் விறைத்துவிட்டேன். தசைகள் தென்துருவப் பனிக்கண்டத்தை தேக்கியது போல் அழுத்தம். என் நினைவுகளில் எப்போதும் நீ மேட்டு நிலமாய்... சம வெளியாய்... புல்நிலமாய்... வாழ்கிறாய்.. சில வேளைகளில் உன் வார்த்தையின் வீரியம் அமுக்கவிசையால் உந்தி எழுந்த மலையாய் வானம் தொட வைக்கிறது. சில வார்த்தைகள் நீண்டகால நெருடலால் மென்பகுதியைத் தின்று தீர்த்த எச்சக் குன்றாய் வைரப்பட்டுள்ளது. என் வீழ்ச்சியில் நீ மகிழலாம். மறந்து விட்டதாக நினைக்கலாம். எப்படி மறப்பேன்? உன் நினைவு சுமந்துதான் பள்ளத்தாக்கு நதியாய் பாய்ந்து கடல் தேடுகிறேன். என் ஏமாற்றங்களால் சிலவேளை மனமுடைந்து அழ

மழையும் மன நிலையும்

Image
மழையே! மழைத் துளியே! மண்ணில் வித்தை காட்டும் குளிர்க் கொடியே! கார் மேகப் பந்தல்  அசைவதில் உதிர்ந்திடும் நீர்க்கனியே! உள்ளம் அள்ளும் கவிச்சரமே. முத்துமுத்தாய் விழும் சித்திரத் துளி கொண்டு தாளங்கள் போடுவதேன் ? மனத்தோகை நீண்டு பறப்பதுமேன்? நெஞ்சம் தாவிக் குதிப்பதும் ஏன்? வானம்க றுப்பை அணைப்பதும் ஏன்? வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha kanthaija

உயிர் வாழும் காதல்...

Image
கடல் மீது ஒரு கப்பல். உலகம் அளந்தாட ஒரு பயணம். ஏழை அவனுக்கும் யோகம் கிடைத்தது . ஏறிக் கொண்டான் கப்பலில். உல்லாசப் பயணத்தில் கப்பலெங்கும் ஓடித்திரிந்தான். கடலலைகளை ரசிப்பதிலும் விண்மீன்களை எண்ணுவதிலும் காற்றோடு பறப்பதிலும் உவகை கொண்டான். கடலில் குதிக்க முயன்றவளை கதை கொடுத்துக் காப்பாற்றினான். காதல் மலர்ந்தது அவன் குறும்பில். கப்பலே அவர்களின் விளையாட்டுத்தளம். அரச பெண்ணுக்கு நாடோடியில் காதல் நான்கு நாள் காதலில் கண்டவை ஏராளம். குறுகிய காதலிலும் உயிரிருந்தது. மன நெருக்கமும் துடிப்புமிருந்தது. வயது ஒரு தடை தராத காதலாக அவன் உள்ளம் அவளை அணைத்தது. இருவரின் நெருக்கமும் அரச வம்சத்திற்கு தலையிடியானது. சதியும் கொதியும் கொதித்து சதி விதியாடியது. அரச சதியில்  கள்வனாக்கப்பட்ட கோவலனின் காதலியாய் அவள். பாறை மோதி கப்பல் மூழ்கியது... கப்பலின் அடித்தளத்தில் காதலன் தேடலும் விலங்கொடிப்பும் வெற்றி உயிரைக் காக்கும் போராட்டம். தத்தளிக்கும் கடலில் தத்தளித்தது காதல்.. ஒருவரை மட்டுமாம் தாங்கும் மரக்குற்றி விதியும் சதி செய்தது. காதலன் தியாகி ஆனான். அரச பெண்ணுக்கு நடக்கப

காவிரியின் கண்ணீர்....

Image
நிழல் யுத்தத்தில் பலியாகுது பாரத நாடு. வல்லரசுச் சதியில் இந்தியத் தாயின் கருவறையில் கள்ளத்தன கருக்கலைப்பில் ஒன்றாய் காவிரி நதி....பலியாகுது. குருதிக்குளியலில் பாரதப்பிள்ளைகள். உள்வீட்டு மோதல்கள் கன்னம் வைத்தோர்க்கு கண்ணுக்கு குளிர்ச்சி. எட்டப்பர்கள் இன்றும் பிறந்துள்ளதால் ஆட்சியாளர் சிம்மாசன வெறியில் பேரம் பேசலில் சோரம் போகிறார். பாரதத்தின் குருதிப் படையல் வெள்ளைப்பேய்களுக்கு விருந்தாய் வேணுமாம். நிழலாய் தொடரும் போர்ச்சதியில் நிலப்பிரிவு ..... நதிப் பிரிவு...... சாதிப்பிரிவு..... ஏற்றப்பிரிவு.... பாரதப் பிள்ளைகள் வீரியமற்ற மூடப் பிள்ளைகளாய் முட்டி மோதிச் செத்து நாறினால் வல்லரசுச் சதி வந்தேறும். ஈழப்போருக்குள் நுழைந்த நோர்வே ஆமையாய் இந்தியத் தாய்க்கும் வந்தது கெடு காலம். மூன்றாந்தரப்புகள் சீர்ப்படுத்த வந்திடும். அரசியல் சாணக்கியமாய் காலங்கள் நீளும். பாலின மாற்றம் போல பல எட்டப்பர்கள் ஊசி மருந்தேற்றலில் உருவாகி எழுந்து வருவர். ஈழப்போர் போல் பாரதமும் எரியும். காவிரி கண்ணீராலும் செந்நீராலும் பாரதத்தில் பிறந்ததற்காக ஓலமிட்டு அழும் ஓசை..... வெள்

மானத் துகிலுடுக்க வாரீர்.

Image
புரிதலற்ற உள்ளங்களால் வெடித்துப் பிளக்கிறது பூமி. கற்பாறைத் துளைப்பு.... கனிச்சோலைக் களைவு..... களனிப் பரப்பெங்கும் கட்டிட முளைப்பு.... ஏர் பூட்டிப் பூத்த காலம் போய் தார் போட்டுத் தணலை(ப் )பூத்த கலிகால மலர்ச்சியால் பூமித்தாய்க்கு கடும் நெருக்கடி... குழந்தை அமுதமாய் சுரந்த நதிகள் வற்றி வரண்டதால் இளமை தொலைத்த வறுமைத் தாயாய் பூமி.. காமக் கொடியோனின் கண்களில் தெரியாமல் தன் மேனி மறைத்து மெல்லிய சோலைத் தருக்களால் சுகந்தம் தந்தவளின் முந்தானையைக் கிழித்த முட்டாள் செய்கையால் நிழலை இழந்து வெம்மையில் தத்தளிப்பு.... ஊடலுடன் கூடிப் பிணைந்த மேகக் கூட்டங்கள்- பூமியின் வெற்று மேனி கண்டு விலகியதால் மழைக் கோ(கா)ல மறுதலிப்பு. ஊடலில்லாத இன்பத்தில் கூடலிருப்பதில்லை. மேகங்கள் இனி நிலமடந்தையாள்  மேனியில் பசுமை ஆடை கண்டாலே அள்ளிட வருமாம். கண் குளிர வாழ்வு ரசித்திட பூமித்தாய்க்குப் பூட்டுவோம் ஒரு ஆடை அழகாய். அவள் பொன்னாடை கேட்கவில்லை. பொருத்தமற்ற ஆடையில் அவளுக்கு விருப்பும் இல்லை. நீர் தேடி வேரோடி மண்ணோடு மயங்க பசும் போர்வை நெய்யும் மரஞ்செடிகொடி கேட்கிறாள்.-எனவ

வானம் மனம் காதல்

Image
வானம் உன்னைப் போல் அதிசயமானது... அந்தி.... அதிகாலை.... நிமிடத்துக்கு நிமிடம்.... வான வதனத்தில் நாணமும் நயனங்களும்.... மழையை ஏந்தி ஒரு பிரதிபலிப்பு.... குளிரைத் தூவி ஒரு அணைப்பு.... வெயிலைக் கொட்டி ஒரு வெறுப்பு... முகிலைப் போர்த்தொரு அலங்காரம். சிலவேளை முற்றும் துறந்த நிர்வாணியாய்..... வான வர்ணங்கள் உன் மனதை நிகர்த்தவை. வானம் அடிக்கடி நிறம்மாறினும் அழகு நிகர்த்த வானம் வானமே.. உன் பிரதிபலிப்புகள் அடிக்கடி மாறினும் உன் காதல் வானம் போன்றது. வான வர்ணங்கள் உன் மனதை நிகர்த்தவை. வானத்தின் மாற்றங்களுக்காய் வானம் இடம் பெயர்வதில்லை. மனதின் மாற்றங்களுக்காய் காதல்  விலகப்போவதில்லை... உன்னைப் போலவே வானமும் அதிசயமானது. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha kanthaija

நீதியின் கண்கள் திறப்பது எப்போது?

Image
கல்யாணத்தின் பின்  ஆணின் பெயரை பெண்ணின் பெயரின் முன் தரிக்க வேண்டுமா? கூடிப்பிரிந்த பின் கணவன் பெயரை நீக்க வேண்டுமா? இழப்பது இருவரின் கற்பும் தானே! சுமப்பது சிலுவை ஒருவர் மட்டுமா? எந்த வகையில் இது நியாயம் ஆகுமோ? மாறத விதியா? மாற்றுவது எப்போது? இருவரும் இணைந்து பெண்ணின் கருப்பையில் கருவைப் போட்டு ஒரு குழந்தை சிருஷ்டிப்பார். தந்தை பெயரே முகவரியாவது எந்த வகையில் நியாயம் ஆகும்? இருவரும் இணைந்து படைத்த படைப்புக்கு ஒருவர் மட்டும் ஏன்  உரிமை கொள்கிறார்? எந்த வகையில் இது நியாயம் ஆகும்? பாதுகாத்து சுமப்பதில் பெரும்பங்கு வகிக்கும் பெண்ணின் ஆற்றலுக்கு  பெருங்குறை வைத்த  சட்டமும் ஒரு சட்டமோ? மாற்றங்களைச் சுமந்து மறுபடி மறுபடி ஏற்றங் காண்பவள் பெண் என்ற பெருமகள்.-அவள் ஆற்றலைப் புதைத்து அநீதி செய்வதை எந்த ஏட்டிலே எழுதித் தீர்ப்பது? நீதி என்றாலே கண்கட்டி வித்தையா? நீதி தேவதையும் கண்கட்டியது இதனாலா?!! வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

இளஞ்செழியன் அண்ணனுக்கு...

Image
உடன் பிறவா அண்ணனே! நீதிபதி இளஞ்செழியனே! இலங்கை தலையில் பூத்த யாழ்ப்பாணத்தை வழிப்படுத்தி சீராக்க வந்த செங்கோலனே! ஆலயத்தில் ஐயர் ஓதும் மந்திர உச்சாடணத்தின் மகிமை கெட்டு ஏதோ மணி இலையான் மொய்ப்பதுபோல் அவலம் கண்டோம். ஆலயச் சத்தத்திற்கு 🔈🔈🔈 வைத்தீரையா ஆப்பு. நன்றி நன்றி.... இன்னுமொரு வேண்டுகை உண்டு அண்ணலே! அதிகாலையில் பிள்ளைகள் படிக்க முடியல. கல்யாணக் கொண்டாட்டமாய் கனரக ஒலி எழுப்பி அசிங்கமூட்டும் பாடல்களும் விரகமூட்டும் பாடல்களும் வெட்கமற்றுப் போடுகின்ற ஒவ்வொரு வீட்டாரிற்கும் இந்தச் சட்டம் போட்டிடுங்கள். வயோதிபர்கள் குழந்தைகளின் தூக்கத்தை கெடுக்கின்றார். வளரும் இளஞ் சந்ததியின் மூளைத்திறனைக் குறைக்கின்றார். கெட்ட கெட்ட செய்திகளை மூளையிலே பதிக்கின்றார். இதயநோயாளிகளும் உயர் அழுத்தம் உடையோரும் பெருஞ்சிரமம் அடைகின்றார். இதை ஒருக்கால் கவனத்துடன் எடுத்திடுங்கள் நீதியரசே. பறவைகளின் பாடல்களை🐔 ரசிக்கவேணும் யாவருமே. அதிகாலை இயற்கை காற்றில் சலசலக்கும் இலைகளின் ஓசை...🍃🍃🍃🍃 சிறுகுருவியின் மெல்லிய தாளம்...🐦🐦🐦 சட சடத்துப் பறக்கும் பறவைகளின் இறகின் ஒலி

தறுதலைக்கு.....சமர்ப்பணம்.

Image
சீ... நாயே என சினக்க வைக்கிறது உன் செயல். தவமாய்த் தவமிருந்த ஒரு புனித தாய்க்கும் தந்தைக்கும் தறுதலையாகப் பிறந்த தரங்கெட்ட ஆண்மகன் நீ. சீதனச் சந்தையில் பெண்ணை ஏலம் விட்ட முள்ளந்தண்டிலி. உன் அன்னையின் அடிவயிற்றின் கீழே ஒளிந்திருக்கும் யோனி தான் எல்லாப் பெண்களுக்குமே உண்டு என்பதை நீ அறியும் காலம் எப்போ? நீ சென்ற பாதையும் செதுக்கப்பட்டு நீ வந்த பாதையும் அது தான் என்பதை உணரும் காலம் எப்போ? உன் அப்பனின் அடிவயிற்றின் கீழ் தொங்கும் கோயில் மணி உருத்தான் உனக்கும் உண்டென்பதை நீயும் அறிவாய். ஆகம விதிகளை மீறி கண்ட இடத்திலும் மணியடிக்க முடியாது. என்பதும் உனக்குத் தெரிந்ததே. கோணலான உன் புத்திக்கும் கொள்கைக்கும் ஆகம விதிகள் எம்மாத்திரம்????? கண்டதே காட்சி கொண்டதே கோலமென வாழத் துடித்து உனது பிறப்பிடத்தை தரக்குறைவாக்கிவிட்டு நிமிர்த்திய நெஞ்சுடன் ஆண்மை காட்டுவது அசிங்கத்திலும் அசிங்கமே. அக்கினி வலம் உன் வாழ்வில் எத்தனை தடவை அரங்கேறுமோ? உன் உன்மத்த ஊற்றுகையை சுமக்கும் பள்ளத்தாக்காய் சுமந்திட பெண் எனும் நதிப்படுக்கை தேவைப்படுகிறது. சலனமற்று நகரும் சண்டாள ஆண்

மன்னித்துவிடு உன்னை நான் சந்திக்க விரும்பவில்லை.

Image
வாழ்க்கை ஒரு வட்ட வடிவம். சிலருக்கு வட்டங்களை அடிக்கடி தொட்டுத் தொட்டு சந்திக்க முடிகிறது. அது வரமாகக் கூட இருக்கலாம். இதோ! இந்த நிமிடம் வரை வானம் பார்த்த பூமி போல.... தென்றலைத் தேடும் மலர் போல... உன்னைச் சந்திப்பேன் என்று அகம் மலர்ந்திருந்தேன்.-ஆனாலும் உன் வார்த்தையில் தகதகப்பாய் பரவிய  தீயின் கனதி... மீள் சுழல்வதால் பொசுங்குகிறேன். """அடையாள மரியாதை செய்ததாய்""" அன்று பகர்ந்த மொழி இன்றும் நோகிறது.- நானும் மனித தசையாலும் இரத்தத்தாலும் ஆன ஆள் என்பதை மறந்தாய்.!??? தெரு நாய்க்கான மதிப்புக் கூட என் அழைப்புக்கு நீ தரவில்லை. கொலைகாரருக்குக் கூட சிறைக்காவலர்கள் கருணை காட்டுவர்.-நீ நீ  விசமங்களால் கொன்றாய். அவசியமற்ற உன் புறக்கணிப்புக்கு விடை  இன்னும் தேடுகிறேன். இன்னொருமுறை  நான் விரும்பிய உன் அழகான விழிகளில் நெருப்பையும் நிந்திப்பையும் பார்த்து பத்தி எரிய என்னால் முடியாது. ஒரு தெரு ஓரப் பாடகனாய் என் பயணங்கள் நீளட்டும். மன்னித்து விடு உன்னை நான் சந்திக்க விரும்பவில்லை. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா