சித்து விளையாட்டு.

கண்கள் என்ற சுனைநதியில் 
காதல் என்ற அமுதசுரபி
ஊற்றெடுக்கும்.

பறவைகளின் மகிழ்ச்சிச்சிறகைப்பாய் இதயத்தில் பரபரப்பு மேவும்.
ஜிவ்வெனப் பரவும் ஒருவித மெல்லின மின்சார தொடரலை அதிர்வு 
தாலாட்டு மந்திரப்பாடல் பாடும்.
ஒளிநிறைந்த கண்கள்
மனதைத்திருடித் திருடி
இருளைப்போர்த்துக் கொள்ளவே
அவஸ்தைப்படும்.
பூக்களும் பாக்களும் 
தெய்வ தரிசனமும் சாட்டுப்போக்குக்கு
துணை நிற்கும்.
நட்புக்களை விட்டு விலத்திய
மௌன குறுகுறுப்பு
குற்றால அருவியாய்
குதித்தாடும்.

ஏதோ ஒரு பரமரகசியத்தைத் தேடும் மகரிஷிகளின் தவத்தில்,
நெட்டுருகிப் பாடும் சுலோகமந்திரமாகும் அந்தக் காதல்நாமம்.
தேடல் தேகத்தையே குறிபார்க்கிறதென கைவிரல்களின் மெல்லிய உரல்சல் உறுதிப்படுத்தும்.
அதையே இன்ப சுவர்க்கமென
ஒரு அசரீரி உறுதிப்படுத்தி
மாய வலை விரிக்கும்.

மூடாத விழிகள் இரவுகளை ரட்சகனாக்கி,
இதயச்சோலையில் கதகளிநடனத்தை
விதவிதமாய் அரங்கேற்றும்.
இரவுகள் இன்பத்தின் போதையென விழிமூடாத இரவுள் ரகசியமாய்
ஏதேதோ கதைபேசி கிணுகிணுக்கும்.

விரல்கள் வரையாத வண்ணக் கடிதங்களை
வரைந்து தீர்க்க மனத்தூரிகை
வர்ணக்கலவைகளை அள்ளிக்கொள்ளும்.
அழகு அழகாய் காதல் அரங்கேற்ற ஒத்திகையில்
முடிவுகள் காமப்போர்வையோடு
அர்த்த ராத்திரியைப் பரிசாக்க மதிப்பெண் தந்து வாழ்த்தும்.

தேடல் நிறைந்த அந்த முதலிரவு
படபடப்பைத் தர வந்து நிற்கும்.
ஆசையும் பயமும் கலந்த 
அரை நிர்வாண யுகம்
அவஸ்தை அர்த்தராத்திரிப் பொழுதுகளை பரிசளிக்கும்.
இரவின் முடிவில் ஒரு பேரின்பத்தை திளைக்கவைத்து தீமீதித்து,
நீர்க்குளித்து திளைத்துக்கொள்ளும்.

ஆவல் தரும்  புதிய உணவின் தித்திப்புப்  போல் 
அள்ளித்தின்ன நேரகாலமற்ற
உருவரையும் விளையாட்டு இன்பமென
காலத்தை விழுங்கிக் கரையும்.
தித்திப்பு விளையாட்டு ஒரு நாள்
திகட்டலுற்று விடைபெற
ஆவல் குறையாத 
பொழுதுகள் பூத்துச் சலித்து விடைபெறும்.

பருவ மாற்றங்கள் போல
கால நகர்வு போல
சுவைச்சாறு இழந்த கனிபோல
ஒருநாள் முற்றும் இழந்த பின் ஞானம் பிறக்கும் .
விபரீத விளையாட்டுக்கான தவம் என பிதற்றத்தொடங்கும் உள்ளம்.
காலம் கடந்த அந்த உதயதரிசனத்தில்
காமப்பூக்களின் மந்திரத்தடாகம்
பூத்து , மாயாஜாலம் காட்டி,
வேற்றுருக்கொண்டிருக்கும்.

காக்கும் வேலிகளாயோ
விட்டேறிகளாயோ காலம்  மாற்றி,
புதிய ஞானப்பாதையென 
வேறொரு திசை காட்டும்.
காதல் புனிதம், சுத்தம், 
சுகந்தம் என யாரும் சொன்னால்
காதலைத் தரிசித்து விடைகொடுத்தோர்
யாருமே நம்ப மாட்டார்கள். 

காதல் ஒரு சித்து விளையாட்டு.



Latha kanthaiya
( வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா) 
.

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹