இறந்த நியாயங்கள் எங்கும் பிறப்பதில்லை.

அழுது மயங்கி,
களைத்து உறங்கி ,
மீண்டும் குற்றுயிரும் குலையுயிருமாய்
விழிகள் திறந்த போதெல்லாம்
நானிருக்கிறேன் எனச் சொல்லி
ஆறுதல்படுத்த எப்போதும்
என் அருகில் யாரும் இருந்ததில்லை.
எப்போதும் இருப்பதைப் பறிக்க நினைத்தோரின்
வரிசை மட்டும் நீண்டிருந்தது.

வலி தெரியாத
ஒருவகை மாத்திரை போட்டு
நிரந்தரமாக உறங்க வேண்டும் என
ஒரு பிரமை பூத்த
போதை நெஞ்சோடு
போராடிக் களைத்து
துவண்ட போதெல்லாம்
               "எங்களை என்ன செய்வதாக
                உத்தேசம்? " என
நான்கு சின்ன விழிகள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தன.
நான்கு சிறிய கரங்கள்
மார்போடு இறுக்கியிருந்தன.
அந்த சின்னத் தசைக்கூட்டுக்குள்
இறுகிப்பிணைந்த இதயக்கடிகாரம்
             "கைவிட்டு விடாதே
               தெருவிட்டு விடாதே"
என கதறிக்கெஞ்சிக்கொண்டிருந்தன.

நசுங்குண்ட வாழ்வு .
நாதியற்ற வாழ்வு.
வலி தெரியாத உலகம்
தேவை என்று தான்
அடிக்கடி ஒப்பாரி பாடியது உள்ளம்.
 
        "நம்பித்தானே வந்தேன்" என
அலறிக்கொண்டது ஆத்மா.
அதே அலறல் சத்தத்தையே
சின்னஞ்சிறிய அக்கினிபூத்த
இதயங்களும் பதை பதைத்து
நீதி கேட்டன.

பூக்களை தெருவிட்டு ஏக முடியாத
சிந்தை துளிர்க்க
சகித்துக்கொண்டது மனது.
இடையிட்டு வந்த
முகமூடி மனிதர்க்காய்
பலியிட்டுக்கொள்ள
நினைத்த உயிரைப் பக்குவப்படுத்த
கற்ற போது
தெளிவு வந்தது.

நொடிப்பொழுதில் கரைந்து
உணர்ச்சித் தீ மூட்டி இறந்திருந்தால்
முகமூடிகளுக்கே அது சாதகமானதாய்
ஆக்கப்பட்டிருக்கும்.
அநாதை மடத்தில் இரு ஜீவன்கள் தவித்திருக்கும்.
அநாதை மடங்களை விட
கொடுஞ் சிறைச்சாலைகள் வேறுண்டோ? அதை நானும் நன்கறிவேன்.

சகிப்பும் துளிர்ப்பும்
குழந்தைகளுக்காய் வாழத் துணிந்த செயலும்
வாதை புரிந்தோர்க்கு
வாதை கொடுத்தது பூமராங்காக.

ஒருமுறை தான் இந்த வாழ்வு..
போகும் வரை அது
தன் போக்கில்போகட்டும்.

இதே!
அடைகாத்த
அக்கினி மலர்கள் ஒளிர்கின்றன.
அந்த வெளிச்சம்
என் ஆயுளுக்குப் போதும்....
என் வரலாற்றுச் சான்றுகளாய்.

என் தோழமைகளே!
உயிரை மாய்க்கும் முன்
உங்கள் பிள்ளைகளை சிந்தியுங்கள்.
உங்களுக்காக துடித்துப்போகும்
இதயங்கள் இந்த உலகிலே
ஏராளம் உண்டென
உணருங்கள்.
இறந்த நியாயங்கள் எங்கும்
பிறப்பதில்லை.

Latha kanthaiya
(வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா)


Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹