Posts

Showing posts from 2020

காலம் கரைக்கும்.

Image
தகித்துக்கொண்டிருந்த ஆத்மா தான் எடுத்த உருவை  அழித்து, தன்னுருக்கண்டு மயங்கியோரைத் தண்டித்த வெறித்தனத்தில் மீளாத்துயிலை சடலத்திற்கு வழங்கியது. வலியோடிய நரம்புகள் ஓய்வுற்றன. வதை சுமந்த குருதி உறைந்து போனது. குற்றப்போர்வை போர்த்திய மௌனிகள் வாய்மூடி கரையுண்டு போகும் தேகத்தைச் சுமந்து நடமாடும் ஆத்மாவை அணைத்தழுதார். ஆத்மா விட்டேகிய பிண உடல் தாள தப்பட்டை சங்கோசையோடு இறுதி புகுந்த இடம் விட்டு நகர்ந்தது. பிண உடலை எரிகொள்ளி மேவியது . எரியுண்ட தேகச்சாம்பல் கரையுண்டு போனது கடலில். காரணமின்றி எதுவுமில்லை. காரியர்கள் இனி நினைவைக் கரைப்பார். கரையும் வரை நினைவுகளில் கரைவார். காலம் கரைக்கும். எல்லாமே கரைந்து போகும். Latha kanthaiya (வன்னிமகள் எஸ்.சஞ்சிகா) .

இறந்த நியாயங்கள் எங்கும் பிறப்பதில்லை.

Image
அழுது மயங்கி, களைத்து உறங்கி , மீண்டும் குற்றுயிரும் குலையுயிருமாய் விழிகள் திறந்த போதெல்லாம் நானிருக்கிறேன் எனச் சொல்லி ஆறுதல்படுத்த எப்போதும் என் அருகில் யாரும் இருந்ததில்லை. எப்போதும் இருப்பதைப் பறிக்க நினைத்தோரின் வரிசை மட்டும் நீண்டிருந்தது. வலி தெரியாத ஒருவகை மாத்திரை போட்டு நிரந்தரமாக உறங்க வேண்டும் என ஒரு பிரமை பூத்த போதை நெஞ்சோடு போராடிக் களைத்து துவண்ட போதெல்லாம்                "எங்களை என்ன செய்வதாக                 உத்தேசம்? " என நான்கு சின்ன விழிகள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தன. நான்கு சிறிய கரங்கள் மார்போடு இறுக்கியிருந்தன. அந்த சின்னத் தசைக்கூட்டுக்குள் இறுகிப்பிணைந்த இதயக்கடிகாரம்              "கைவிட்டு விடாதே                தெருவிட்டு விடாதே" என கதறிக்கெஞ்சிக்கொண்டிருந்தன. நசுங்குண்ட வாழ்வு . நாதியற்ற வாழ்வு. வலி தெரியாத உலகம் தேவை என்று தான் அடிக்கடி ஒப்பாரி பாடியது உள்ளம்.           "நம்பித்தானே வந்தேன்" என அலறிக்கொண்டது ஆத்மா. அதே அலறல் சத்தத்தையே சின்னஞ்சிறிய அக்கினிபூத்த இதயங்களும் பதை பதைத்து நீதி

மதங்களுக்குத் தெரியாதது...

Image
உள்ளாடைகளை அவிழ்த்தால்  என்ன தெரியும்? என  என் மகனிடம் கேட்டேன். இது என்ன கேள்வியம்மா? என நெளிந்தவனிடம்  மீண்டும் கேட்டேன். குறி தான் தெரியும் என்றான். மகளிடமும் இதே கேள்வியை கேட்டேன். அசிங்கக் கேள்வி என்றவள், மீண்டும் கேட்கவே அந்தரங்கம் தான் தெரியும் என்றாள். இங்கே பாருங்கள் என  அந்தரங்கத்தை அலசும்  கலகக்காரர் செயலைப் படித்து காட்டினேன். முகத்தை சுழித்தபடி சொன்னார்கள் இரண்டு கால்களோடு  இரண்டு கைகளோடு மனித அங்கங்களைக் கொண்ட வினோதமான கொடிய மிருகங்கள் என. கொடிய மிருகங்கள் தான் கண்களைத் தின்னும். கொடிய மிருகங்கள் தான் உயிரைப் பறிக்கும். கொடிய மிருகச் செயலே தீமூட்டல், கல் எறிதல் என குழந்தைகளுக்கு தெரிந்திருக்கிறது. அன்பைப் போதித்த மதங்களுக்குத் தெரியவில்லையே. Latha kanthaiya (வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா)

ஒப்பந்த தீப்பந்தம்

Image
பதிவுத்திருமணம் போல காதலும் ஒரு ஒப்பந்த தீப்பந்தம். ஏற்றும் விண்ணப்பத்தோடு மலர்ந்து விண்ணப்பத்தோடு வலுவிழந்தும் போகும் . நெருங்கிக் கலந்த நெஞ்சங்கள் நொருங்கியும் போகலாம். ஆளாளுக்கு அதன் அளவு விகிதம் வேறுபடலாம். சில ஒப்பந்தங்கள் கடனுக்கும் பழிப்புக்கும் அஞ்சித் தொடரலாம். அதில் சுவை குறைந்திருக்கவே வாய்ப்பு அதிகம். ஒப்பந்தத்தை உணர்ந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஒப்பந்தத் தீபத்தை ஏற்றிக் காதலியுங்கள். காதல் ஒப்பந்தம் இனிக்கும். தீபமென ஒளிரும். உள்ளத்தில் வசதி இருக்கும் வரை காதலியுங்கள் யாரும் தடுக்கப்போவதில்லை. இனிப்பது மட்டுமல்ல காதல். அது அறுசுவை அமுதம். புரிந்து கொள்ளுங்கள். விடைபெறும் காலம் வரும் போதும் அதே காதலோடு வழியனுப்பவும் கற்றுக்கொண்டு காதலியுங்கள். அது தான் அழகும் தரும். Latha kanthaiya (வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா)

விதிகள் வலிமை மிக்கவை

Image
துவைத்துப் போட்ட வெள்ளை ஆடையில் தெறித்து விழுந்த வானவில் நிறங்களைப் பிரித்துத் தேடிய நியூட்டனின் மூன்றாம் விதிக்குள் குதித்து குளிக்கும் உள்ளத்தின் வண்ணங்களை உய்த்தறிய முடியாத காதல் ஞானியர்கள், காதலர் தினத்தில் அணியும் ஆடையின் வண்ணத்தை அலசி ஆராய்ந்து தேடினர். விதிகள் வலிமை மிக்கவை நிறங்களை விட. Latha kanthaiya ( வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா)

சித்து விளையாட்டு.

Image
கண்கள் என்ற சுனைநதியில்  காதல் என்ற அமுதசுரபி ஊற்றெடுக்கும். பறவைகளின் மகிழ்ச்சிச்சிறகைப்பாய் இதயத்தில் பரபரப்பு மேவும். ஜிவ்வெனப் பரவும் ஒருவித மெல்லின மின்சார தொடரலை அதிர்வு  தாலாட்டு மந்திரப்பாடல் பாடும். ஒளிநிறைந்த கண்கள் மனதைத்திருடித் திருடி இருளைப்போர்த்துக் கொள்ளவே அவஸ்தைப்படும். பூக்களும் பாக்களும்  தெய்வ தரிசனமும் சாட்டுப்போக்குக்கு துணை நிற்கும். நட்புக்களை விட்டு விலத்திய மௌன குறுகுறுப்பு குற்றால அருவியாய் குதித்தாடும். ஏதோ ஒரு பரமரகசியத்தைத் தேடும் மகரிஷிகளின் தவத்தில், நெட்டுருகிப் பாடும் சுலோகமந்திரமாகும் அந்தக் காதல்நாமம். தேடல் தேகத்தையே குறிபார்க்கிறதென கைவிரல்களின் மெல்லிய உரல்சல் உறுதிப்படுத்தும். அதையே இன்ப சுவர்க்கமென ஒரு அசரீரி உறுதிப்படுத்தி மாய வலை விரிக்கும். மூடாத விழிகள் இரவுகளை ரட்சகனாக்கி, இதயச்சோலையில் கதகளிநடனத்தை விதவிதமாய் அரங்கேற்றும். இரவுகள் இன்பத்தின் போதையென விழிமூடாத இரவுள் ரகசியமாய் ஏதேதோ கதைபேசி கிணுகிணுக்கும். விரல்கள் வரையாத வண்ணக் கடிதங்களை வரைந்து தீர்க்க மனத்தூரிகை வர்ணக்கலவைகளை