கானகத்துப் பாடல்...🌵🌾🌵🌾🌵🌾🍂🌾🌵



கொன்றைப் பூக்கள் பூத்துக்
குலுங்கும் ஓர் அடவியில்
அண்டங்காக்காய் அரிதாய் வரும்.
காட்டுக்கிளைகள் தாவித்தாவி
கோகிலமும் கூவிப் பாடும்.
மஞ்ஞை(மயில்) மழை கண்டு
கண் விரித்து களிப்பூட்டும்.
சில்வண்டு சுருதி போடும்.
சிலவேளை மந்தி பாயும்.
காட்டுப் பழங்கள் கண் சிமிட்டும்.
கானகமும் சோலை நிகர்த்த
இன்பத்தை அள்ளித் தரும்.

உடும்போடும் முயல் ஓடும்
மானினமும் மருண்டோடும்.
காட்டுக்கோழி வேகங் காட்டும்.
சர்ப்பங்கள் நெழிந்தசையும்.
யானை வந்த தடமிருக்கும்.
சருகுகள் படபடக்கும்.

பாலையுடன் உலுவிந்தைப்
பழம் கனிந்து பளபளக்கும்.
பூனைப்பழம் நாயுருவி
பூக்களும் புன்னகைக்கும்.
முதலிப் பழம் சுவையூட்டும்.
மைப்பழங்கள் வர்ணம் தரும்.
காரைக்காய் சூரைக்காய்
முள்சூடிக் கனிந்திருக்கும்.
சிற்றிதழ் செடி கொடிகள்
பற்றிப் படர்ந்து பசுமை சேர்க்கும்.

காட்டுக் கொடிகள் தாகந் தீர்க்கும்.
பாசியுடன் படர் கொடிகள்
மேலுயர மரம் தாவும்.
முகிலினங்கள் நிலமடந்தை
முகம் பார்க்கத் தவங் கிடக்கும்.
கருவேலை கருங்காலி முதிரை பாலை
நெருங்கி நின்று குடைபிடிக்கும்.
ஆலங்கொடிகள் ஊஞ்சலாகும்.
ஆளை உருக்கும் அனலடிக்கும்.
ஆனாலும் மனமோ காடுறைந்து கவிபடிக்கும்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija


Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹