இதய முற்றத்தில்..... ❤💚❤💚❤💚❤💚❤ 🐤🐦🐤🐦🐤🐦🐤🐦🐤🐦
"அன்பைத் தருகிறேன்.
ஆயுள்வரை எடுத்துக்கொள்."
என்ற உன் திருவாயால்.....
இப்போ....
"அதுக்கு வேற ஆள பாரு" என்கிறாய்.
உண்ட மிட்டாயை உடனே தா என்று
சிறு பிள்ளை போல அடம் பிடிக்கிறாய்.
சிரிப்பு வருது உன் செய்கை கண்டு.
"அன்பைத் தருகிறேன்
ஆயுள் வரை எடுத்துக்கொள் " இவை
எனக்காக உன் இதயம் சிலிர்த்த சிலிர்ப்பு.
இதயத்தில் எழுந்த வாக்கொளி.
அந்தக் குளிர்ச்சுவையை
அந்த ஒளிவடிவை
நானிழக்கத் தயாரில்லை.
ஆயுள் முடிந்த பின்னும்
உன் அன்பில் நனையும்
அழகிய வரமது.
"விதைத்தவை தான் அறுவடையாகும்" என்கிறாய்.
குஞ்சு பொரிக்கவும் கதகதப்பான
அடைகாப்புத் தேவை.
என் அன்பு முட்டைகளை
உன் கோபத்தின் கதகதப்பில்
அடைகாத்துக் கொள்.
அவை
அழகான குஞ்சுகளை
நிறைவாகப் பொரித்து
இதயத்து முற்றத்தை நிறைத்து
மென் மொழியால் அழகூட்டட்டும்.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments
Post a Comment