காற்றோடு சலசலத்த புதிய கதை. 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
நீரோடும் வீதியிலே
நாரறுத்து வேரழ தறித்தமரம்
கிளையிழந்து இலையிழந்து
கிளை சூழ்ந்த உயிரினமிழந்து
விம்மிப் புடைத்து விஞ்சியழுத வலி
தெறித்து வேரோடு பிளவுண்டு
வெறித்தனமாய் முளைத்ததொரு முளை.
முளையிலே இலை துளிர்க்க
சடைசடைத்து பரந்ததங்கு கிளை.
வேரின் வெப்பம் குளுகுளுத்த
குளிர் கண்டு கும்மி பாடியது நதி நீர்.
மீண்டும் கிளைகண்டு கிளர்ந்து வந்த
பறவையினம் பாடலும் தழுவலுமாய்
பற்றிப்படர்ந்து பறந்து கிலுகிலுத்தன.
சில்வண்டு சுருதி மீட்ட
பொன் வண்டு தலையாட்ட
குயில் ராகம் குவித்து நல்ல
விருந்தாடல் மீண்டுமங்கு அரங்காடியது.
வேரறுத்த கூட்டமும் வந்து நின்று
வெக்கை தீர இளைப்பாறியது.
வாழ்க்கை வாழவும் வாழ வைக்கவுமே என்ற
ஒரு செய்தி இலைதழும் காற்றோடு சலசலத்தது.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments
Post a Comment