முள்ளாய் குத்தும் முள்வேலிகள்


நீறுபூத்த தணல்களாய்
நினைவுகள்............
கண்ணீரின் கொந்தளிப்புக்கள்
சுடுநீரின் வெம்மையாய்...

உயிரைத் திருகும்
வதை நிறைந்த வலி......
உக்கி உலர்ந்து எருவானோரின்
ஆக்கிரமித்த அழகு மொழி காற்றோடு.....

அன்னையின் அமுதத்தைத் தேடும்
குழந்தையின் சிறுவிரல்களின்
நினைவுத் தழுவல் நெஞ்சோடு.......

மூடிய சுவருக்குள் நசுங்குண்டு
மெய்யிடிந்து ஒப்பாரியிடும் கதறல்
மழையோடு கரைந்த இடிமின்னலாய்....

ஏதிலராய் போன வாழ்வின் துடிப்பில்
எழுதப்படாத காவியங்களின் நீட்சி
ஓவியனுக்குத் தூரிகையற்ற நிலையாய்....

நொடிப்பொழுதில் மூச்சிழந்து புதையுண்டோரின் வாழ்நாள் வலி ... ...
நெஞ்சுக் கூட்டுக்குள் நெருப்போடு
நெடும் பயண யாத்திரையாய்.....

வன்னி யுத்த அவலச் சகதி
குருதியும் பிணமும் மணமுமாய்....
கந்தக நொடியும் கண்ணீர்க் கதைகளும்
நீதி கேட்டிரங்கும் அலையடிப்பாய் ....

இன்னும் இரங்காத இரட்சகர்கள்
உள்ளும் வெளியுமாய் தந்திர மேய்ப்பராய்
ஆண்டுகளை இழுத்தடிக்கும் கள்ளத்தனம்.

கண்ணீரோடு கட்டித்தழுவி சரணடைய
கண்காண அனுப்பினோரை
காணமல் போனோர் என
பொய் உரைக்கும் நரித்தந்திரம்....

மன்னாரில் தொடங்கி முள்ளி
வாய்க்காலில் முடிந்த கதை..
கதையல்ல இனத்தின் அழிப்பு...
இனத்தின் இறைமைச் சரிவு...

கள்ளப் படைகளும் கைக்கூலிகளும்
இனத்தின் சங்கறுத்த சரித்திர நீட்சி....

இரத்தமும் சதையும் உயிரும்
உரமாய் விதைத்தமண்ணின்
அவல உயிர்ப்புகள் மூண்டெரிய
முள்ளாய் குத்தும் முள்வேலி நினைவுடன்
நடமாடும் பிணங்களாய் நாம்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹