இழந்தவைகளை எண்ணி வருந்திப் பாட மனமில்லை.


போர் அவலம் காணாத
சொகுசாய் வாழ்ந்த கயவர்கள்
சிந்திய குருதியை.............
சிதறிய உயிர்களை....................
தியாகங்களைக்..... கண்ணீரை
செய்திப் பொருளாக்கி
செய்தித் தாளை அலங்கரிக்கும்
அவலத்தை அடிக்கடி பார்ப்பதால்
இழந்தவைகளை எண்ணி
வருந்திப்பாட  மனமில்லை.

இழந்தவர் துயரதை
அலங்காரக் கதிரைக்கு
அலங்காரம் ஆக்கினார்.
இழந்தவரை ஏலம் விட்டு
ஏந்திப் பிழைக்கும் அடிமைகள் இவர்கள்.
வீர முழக்கமிட்டு ஆவேச அபிநயம்
அடிக்கடி காட்டி அலங்கரிப்பர் நாளிதழை.
ஆர்வலர்கள் கொட்டிக் கொடுக்கும்
வெள்ளிப் பணத்திலே
சொகுசு வாகனமும் சுகபோக விருந்துமாய்
காலத்தை உருட்டும் வினோதப் பிறவிகள்.

தம்மோடு ஒட்டி உறவாடுவதிலும் ஒரு
கெட்டித்தனம் வைப்பர். அவர்கள்
திருகிவிடும் திசையெங்கும்
தலையாட்டும் பொம்மையர்க்கும்
அவர்களைத் துதிபாடி மகிழ்வோர்க்கும்
பதவி கொடுத்தொரு கொலுபொம்மையாக்கி சுகம் காண்பார்.
நியாய தர்மங்கள் நீதியுரை மொழிவோரை
எதிரியாய் புறம் தள்ளிப் புன்னகைப்பர்.

மேடைகளில் நெற்றிவியர்வை சிந்த
நெடும்பாவாய் பேச்சுரைப்பர்.
பேசிய பேச்சினால் களைத்து கறுத்தவர்
நாவிலே சுவையூற சிற்றுண்டிகளை
பேருண்டிகளுக்குள் திணித்து இன்புறுவர்.
இவர்கள் பேச்சில் வீரர்கள்.
இவர்கள் பெருந்தீனிப் பிரியர்கள்.
நீட்டிய பெரு உதரம்
சாற்றி நிற்கும் இவர்கள் வீரம்.

இரத்தமும் தசையுமாய்
உயிர்களை விதைத்தவர்
வயிறுகள் காய்வதை பார்த்திடார்.
போரிலே கணவனை இழந்தவர்
தாயிழந்த தந்தையிழந்தவர்
வாழ்கின்ற கோலத்தை அறியார்.
பிள்ளைகளைக் காணாமல்
தத்தளிக்கும் அன்னையரை
அரவணைப்பதாய் பாவனை காட்டி
புகைப்படம் எடுத்து விளம்பரம் ஆக்குவார்.
எரியும் அவர் வயிற்றின் நிலையறியார்.
போரினால் அவையங்களை இழந்து
வாழ்பவர் வேதனை அறியார்.
அடிக்கடி செய்தித் தாள்களில்
முகம் காட்டி மகிழ்கின்ற
கதிரைக் கனவுலக கயவரால்
இழந்தவைகளை எண்ணி
வருந்திப்பாட மனமில்லை மனமில்லை.

பரதேசிக் கோலமிட்டு கௌரவமாய் சனத்தை வைத்து பிச்சை வாங்கி
வயிறு வளர்க்கும் கயவர்களால்
இழந்தவைகளை எண்ணி
வருந்திப்பாட மனமில்லை. இவர்கள்
வருந்தல் பாவையும் பிச்சை எடுக்க
வசதியாக்கி விடுவரோ?  என்பதனால்
இழந்தவைகளை எண்ணி
வருந்திப் பாட மனமில்லை.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹