எனக்கென்று வீடு வேணும்.❗


எனக்கென்றொரு வீடு வேணும்.
மாடமாளிகையோ....
ஏழைக்குடிசையோ....
எனக்கென்றொரு வீடு வேணும்.
சுற்றயல் நிறைய பச்சய மரங்கள்
குடைபிடித்து குளிர் காற்றுத் தர வேணும்.
குளமோ குட்டையோ நீர்ச்சுனையோ ஒரு
நீர்த்தடாகமும் நிறைந்திருக்க வேண்டும்.

சில்வண்டுச் சுருதியும்
அணில்பிள்ளை நாதமும்
விடிகாலை கரைந்தெழுப்பும்
காகத்தின் பாடலும்
செட்டையடித்து வீரக்கூவலிடும்
சேவலின் சங்கு ஓசையும்
கிளிகளும் குருவிகளும்
மகிழ்ந்து பேசும் பாஷையும்
வட்டமிட்டு வண்ணங்காட்டும்
தேனிக்களும் வண்ணத்துப் பூச்சிகளும்
நிறைந்த ஒரு சோலையிலே அழகாய்
எனக்கென்று ஒரு வீடு வேணும்.

அள்ளி இறைத்த மடைவெள்ள நீராக தெள்ளுதமிழ்மொழியே காதில்
தேனாய் சுவை ஊட்ட வேண்டும்.
மாமனோ மச்சானோ யார் எந்தன்
உறவினனோ யாராக இருந்தாலும்
விருந்துக்கும் சுக துக்கத்துக்கும்
அளவோடு தங்கி விடைபெறும்
மனித வெக்கை இல்லாத
சுவாத்தியம் நிறைந்த
வீடு வேண்டும் எனக்காக....

என் பெயரை என் வீடு தாங்கி
நிற்க வேண்டும்.
தபால்காரன் அறிந்து வரும்
முகவரியும் வேண்டும்.
அமைதியான ஓவியமாய்
எந்தன் வீடு திகழ வேண்டும். தமிழ்
சொந்தங்கள் அயலவராய் நிறைந்திருக்க
வேண்டும்.
கருமபீடம், கோவில், பாடசாலை..
தமிழ்மொழியால் அழகுபெற்று
அருகிருக்க வேண்டும்.
களைத்த போது கால்நீட்டி நிம்மதியாய் உறங்க எனக்கான ஒரு வீடு வேணும்.
வீடு போலொரு நாடும் வேணும்
சுதந்திரமாய் மகிழ்ந்தாட.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹