மானத் துகிலுடுக்க வாரீர்.

புரிதலற்ற உள்ளங்களால்
வெடித்துப் பிளக்கிறது பூமி.
கற்பாறைத் துளைப்பு....
கனிச்சோலைக் களைவு.....
களனிப் பரப்பெங்கும் கட்டிட முளைப்பு....

ஏர் பூட்டிப் பூத்த காலம் போய்
தார் போட்டுத் தணலை(ப் )பூத்த
கலிகால மலர்ச்சியால்
பூமித்தாய்க்கு கடும் நெருக்கடி...

குழந்தை அமுதமாய்
சுரந்த நதிகள்
வற்றி வரண்டதால்
இளமை தொலைத்த
வறுமைத் தாயாய் பூமி..

காமக் கொடியோனின்
கண்களில் தெரியாமல் தன்
மேனி மறைத்து
மெல்லிய சோலைத் தருக்களால்
சுகந்தம் தந்தவளின்
முந்தானையைக் கிழித்த
முட்டாள் செய்கையால்
நிழலை இழந்து
வெம்மையில் தத்தளிப்பு....

ஊடலுடன் கூடிப் பிணைந்த
மேகக் கூட்டங்கள்- பூமியின்
வெற்று மேனி கண்டு விலகியதால்
மழைக் கோ(கா)ல மறுதலிப்பு.

ஊடலில்லாத இன்பத்தில்
கூடலிருப்பதில்லை.
மேகங்கள் இனி
நிலமடந்தையாள்  மேனியில்
பசுமை ஆடை கண்டாலே
அள்ளிட வருமாம்.

கண் குளிர வாழ்வு ரசித்திட
பூமித்தாய்க்குப் பூட்டுவோம்
ஒரு ஆடை அழகாய்.
அவள் பொன்னாடை கேட்கவில்லை.
பொருத்தமற்ற ஆடையில்
அவளுக்கு விருப்பும் இல்லை.

நீர் தேடி வேரோடி
மண்ணோடு மயங்க
பசும் போர்வை நெய்யும்
மரஞ்செடிகொடி கேட்கிறாள்.-எனவே
ஆளுக்கொரு மரம் நாட்டி  -மீண்டும்
பூமிக்கு  மானத்துகில்
போர்த்துவோம் வாரீர்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹