குறித்துக்கொள் . 🍀🍀🍀


உன்னை மறந்து விட்டதாகத் தான்
நீ நினைத்துக் கொள்கிறாய்.
என்னென்று சொல்வேன்
என் இதயத்துடிப்புள்ளவரை
உன் நினைவுத் துளிர்ப்புகள்
பசுமைதேடும் ஒசோன் படலமாய்...

வெப்பத்தைக் கக்கிய உன் வார்த்தைகளை
பசுமை வாயுக்கள் போல்
இதயம் உறிஞ்சிக் கொண்டதால்
நெட்டலைக்கும் குற்றலைக்கும் இடையில் முட்டிக் கொள்ளும்
கடும்போர் போல்
இதயச் சுவர்களில் தேய்வு நிலை.

மௌனமாகி மரணிக்கும் நிலை தந்தாய்.
ஆயிரம் முறை என் அழைப்பை
அசட்டை செய்ததால் விறைத்துவிட்டேன்.
தசைகள் தென்துருவப் பனிக்கண்டத்தை
தேக்கியது போல் அழுத்தம்.

என் நினைவுகளில் எப்போதும் நீ
மேட்டு நிலமாய்...
சம வெளியாய்...
புல்நிலமாய்... வாழ்கிறாய்..

சில வேளைகளில்
உன் வார்த்தையின் வீரியம்
அமுக்கவிசையால் உந்தி
எழுந்த மலையாய்
வானம் தொட வைக்கிறது.

சில வார்த்தைகள்
நீண்டகால நெருடலால்
மென்பகுதியைத் தின்று தீர்த்த
எச்சக் குன்றாய் வைரப்பட்டுள்ளது.

என் வீழ்ச்சியில் நீ மகிழலாம்.
மறந்து விட்டதாக நினைக்கலாம்.
எப்படி மறப்பேன்?
உன் நினைவு சுமந்துதான்
பள்ளத்தாக்கு நதியாய்
பாய்ந்து கடல் தேடுகிறேன்.

என் ஏமாற்றங்களால் சிலவேளை
மனமுடைந்து அழுவதால்
வடிநில வெள்ளப் பெருக்காய் பிரளயம்.
உன்னைச் சுகமாய்
சுமந்து அசைகையில்
வடிநிலப் பயிர்கொடி  உயிர்ப்பதுபோல்
நினைவுத் துளிர்ப்புகளில் மகரந்த நாணம்.

வாழ்க்கை
குடா, முனை ,,கழிமுகம் என
பல்லுரு வடிவென்பதை அறிவேன்.
நீர்வீழ்ச்சி ,கழிமுகம்,மியாந்தர் என
வீழ்ச்சியும் வளைவு சுழிவும்
கொண்டது என்பதையும் அறிவேன்.

என்ன செய்வது உனக்கு நான்
அழிந்து போவதில் ஒரு மகிழ்வு.
உன்னை நினைக்காத பொழுதுகளில்லை
மறந்து விட்டேன் என நினைக்காதே.
மௌனம் சூடி புதைந்து விட்டேன்
இது தான் உண்மை குறித்துக்கொள்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹