வறட்சி நீங்கி அடைமழை பொழிவாய்

.
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

கொஞ்ச நாளாக அதிக அனலடிப்பு.
வறட்சியின் உச்சத்தால்
ஆடை தேய்ந்து
அம்மணமாகும் கதி கலக்கத்தில்
பூமித்தாயின் பெருமல்.
அவளின்
ஏக்கமும் துக்கமும் பெருமூச்சாகி
நிலம் பிளந்து வெடிப்புகளை வகிர்ந்தன.
அவளின் மெல்லிய பசும் பட்டாடை
வண்ணம் கலைந்து
சருகுச் சேலையாக கருகிக் கொண்டது.

வருந்தி வருந்தித் துடித்ததிலே
வதன அழகும் பொலிவிழந்தது.
பூத்துப் பூத்து இன்பம் தந்தவள்
புளுதி குடித்து காற்றுடன் பறந்தாள்.
பூமிக்கும்  ஆதவனுக்கும் நடந்த
ஊடலின் தகிப்பில் அவர்களை
நம்பிய உயிர்களும்
நடைபிணம் ஆகின.

கரும் மேகங்களைத் திரட்டியுருட்டி
கடும் கோபத்தைக் காட்டிய சூரியதேவன்
குளிர்ந்து இளகிய தேவியின் மீது
ஆவியாய் வந்து அணைத்திடத் துடிக்கையில்
பிரிந்தோர் கண்ணீரின்
மடைதிற அருவியாய்
அடைமழை பலதினம் பெருகிப் பொழிந்தது.

ஒப்பற்ற அன்புக் கூடலை உலகோர்
ஓடி ஒழிந்தொரு கண்வழி நுகர
இல்லத்து சாரளவழி தனில் கண்டே
உல்லாசமாய் நுகர்ந்தனர் இன்ப தரிசனம்.

இரவும் பகலும் இனிதான நனைதலில்
இயற்கையன்னை புதுவுடை தரித்தாள்.
பசுமை மீண்டும் பட்டாடையானது.
பூத்தலும் காத்தலும் புதுமெருகோடு.

உயிரைப் பிடித்து திருகும் காதலே நீயும்
வறட்சி நீங்கி அடைமழை பொழிவாய்
பூக்கட்டும் மீண்டும் இருமனப்
புன்னகையும் புரிதலும்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹