ஈழத்தின் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் மகிழினி காந்தன் தற்போது புலம் பெயர்ந்து சுவிச்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார். அவரின் முதற் தனிப்படைப்பாக" இதயத்தின் சிலிர்ப்புகள் " என்ற கவிதை நூல் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அச்சேறியுள்ளது. கவிதையின் பாடு பொருளாகத் தந்துவங்கள் பொதிந்துள்ளன. 66 பக்கங்களைக் கொண்ட இந்தக் கவிதைப் புத்தகத்தை தமிழ்நாட்டு காகிதம் பதிப்பகத்தார் அச்சிட்டு வடிவமைத்துள்ளனர். அணிந்துரையினை யாழிசை மணிவண்ணன் வழங்கியுள்ளார். பதிப்புரையினை மறைந்த நல்லுள்ளத்தோன் மனோபாரதி வழங்கியுள்ளார்.
          தந்தையார் தமிழ்மீது கொண்ட பற்றையும் தன்னைத் தமிழ்படிக்க ஊக்குவித்ததையும் என்னுரையில் பதிவு செய்துள்ளார்.200 குறுங்கவிதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பை அமரத்துவம் அடைந்த தனது தந்தைக்குக் காணிக்கையாக்கியுள்ளார்

                     தன் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லும் திறன் கொண்ட மகிழினி காந்தன் குறுகிய வரிகளில் நிறைவான கருத்துக்களை விதைத்துள்ளார். கவிதை என்பது ஒரு பக்கப் பார்வையன்று. அது பல்லுருக்காட்டி. பார்ப்பவர் மனநிலையைப் பொறுத்து அதன் பிரதிபலிப்பின் வீரியம் கணிப்பிடப்படும். அவ்வாறான வீரிய சக்திமிக்க கவித்துவ ஆற்றலர்கள் வரிசையிலே இப்படைப்பாளியும் இணைந்து கொள்கிறார்.இவரது குறுகிய வரிகளையுடைய பாக்கள் படிக்கும் போது மனதோடு ஒட்டிக் கொள்கின்றன. நம்பிக்கை, அன்பு, அறிவுரை,இரக்கம்,காதல்,வலி, பிரிதல்,புரிதல்,இணைதல், துணிவு போன்ற ஆற்றல்களை மனதில் தெளித்து மயக்கத்தைக் கலைக்கும் சக்தியோடு மிளிர்கின்றன. வாசகர் இரசனைக்காக அவரது  சில கவிவரிகளை பதிவு செய்கிறேன்.

     ஈர்ப்பு (156)
என்னவோ ஒன்று
ஏதோ ஒன்று
ஈர்த்து விடுவதால்
திரும்பிப் பார்க்க
வைத்து விடுகிறது.
               என கூறும் கவிதையிலே மனதை ஈர்க்கும் தன்மையும் பல்கோண  அர்த்தங்களையும் சுவைக்க முடிகிறது.
       
       நினைத்தல் (194)
அடக்க நினைத்தால் கோபத்தை
ஆள நினைத்தால் அன்பை
இழக்க நினைத்தால் பேராசையை
ஈட்ட நினைத்தால் புண்ணியத்தை
உணர நினைத்தால் மனிதத்தை
ஊக்குவிக்க நினைத்தால் திறமையை
எழுப்ப நினைத்தால் வீரத்தை
ஏற்ற நினைத்தால் பெரியோரையும்
ஒழுக நினைத்தால் நல்லொழுக்கத்தையும்
ஓத நினைத்தால் பகுத்தறிவையும்
ஔடதமாய் அருந்தி வாழ்வோம்
         என அகர வரிசையிலே சிறுவர்களும் விளக்கத்தக்க எளிமையான சொற்கோர்வையோடு கவி பாடியுள்ளார்.

      மனநிலைப்பாதிப்பு(8)
நன்கு தெரிந்தால் மட்டுமே
உறுதியாய் பேச வேண்டும்.
ஊ(யூ) கத்தில் நிதானமிழந்து
பழி போடுவதெல்லாம்
மனநிலைப் பாதிப்பின் செயல்.

        வாழ்த்தலாம்(9)
எல்லோர்க்கும் பெரியோனாம்
எல்லாம் வல்ல இறைவனையும்
வாழ்த்துகிறோம்.வணங்குகிறோம்மனிதனை வாழ்த்த வயதெதற்கு!
வாழ்த்தலாம்.
     
     இந்தக் கவிதை வரிகள் நான் படித்த கவித்துவ சிந்தனைக்குள் புதியவை. அழகுநிறைந்த யதார்த்த சிந்தனை. அற்புதமான பொக்கிஷம்.
   
    கொடை(2)
பொருள் கொடுத்தாற்றான்
கொடையா?
மனதைக் கொடுத்தாலும்
கொடைதான்.

  சாத்தியம்(1)
எட்டாத நிலவென்று எண்ணாதீர்.
எட்டாமலா கால் பதித்து வந்தார்?
நம்மால் இன்று முடியாமல் போகலாம்.
நாளை சாத்தியமே ஆகலாம்.

காரணம் புரியும்(14)
கூரிய வார்த்தைகள் சரியானவை தானா? என்று
ஆராய்ந்தால் போதும்
எதிர்த்தரப்பு வார்த்தை அம்பின்
கூர்மையின் தாக்கத்துக்கான
காரணம் புரியும்.
கல்லை எறிந்து விட்டு
பூவை எதிர்பார்க்கலாமோ?

வெல்(40)
சதி கொல்.
சாதித்து வெல்.

வீரம்(41)
அடக்குவது தான் வீரமெனில்
கோபத்தை அடக்குவோம்.

கருவி(117)
மனத்தூய்மையை
அளக்கும் கருவி
கண்டு பிடிக்கப் பட்டால்
கோவிலுக்குள்
குருவானவரும்
இருக்க முடியாது.

    மிகவும் தந்திரமாக படிப்பவர்கள்
யாவருக்கும் புரியும் படியாக எளிமையான வடிவில் திட்டமிட்டு இதனைப் படைத்துள்ளார்.நானிங்கு சில கவிதைகளையே பதச்சோறாக எடுத்துக் காட்டிப் பதிவிட்டுள்ளேன். மேலதிகமாக உண்டு ஞானம் பெற " இதயத்தின் சிலிர்ப்புகள்" உங்கள் கரங்களில் தவழ்ந்து அகங்களுக்கு நல்லுணவாகட்டும். சோர்ந்து போகும் உள்ளங்களுக்கு நல்ல தன்னம்பிக்கை நிறைந்த மானசீகக் குருவாக "இதயத்தின் சிலிர்ப்புகள் " உங்களையும் வாரி அழைத்துச் செல்லும்.
சில இடங்களில் சிலிர்ப்பு சுடும்.
சில இடங்களில் சிலிர்ப்பு குளிர்ச்சி தரும்.
நிறைவில் ஆரோக்கியமான அழகான சிந்தனை தரும் என்பதில் ஐயமில்லை.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹