பாழடைந்த சுவர்கள்



அழகான வீடாக்கி என்னை அழகாய் அலங்கரித்து
மணமகள் வாழ்விடமாய்
தரை வார்த்தார் தந்தையவர்.
திருமணக் கோலத்துடன் மணப்பெண்
அழகிய நாணத்துடன் கதவை
மூடியே கும்மிருட்டில்  ஆசையாய்
சுவர் என்னில் சாய்ந்திருக்க நல்ல
கதைபேசி காதலுடன் இங்கு
குதூகலித்து இன்புற்றனர்.
கண்களை மூடிய இருள்
காதினை மூடவில்லை...
அடுத்தவர் விடுப்பறியும்
ஆசை யாருக்கில்லை...?

கூடிக்களித்தவரால் பல
குட்டிகள் பிறப்பெடுத்தார்..அவர்
சுட்டித்தனங்களிலே நானும்
சுந்தர வடிவங் கொண்டேன்.
இனவாத குண்டுமழை நாட்டில்
எங்கனும் விழுந்தது காண்.
வீட்டுச் சொந்த பந்தமெலாம்
அயல் நாட்டைச் சேர்ந்தன பார்.

தன்னந்தனியனாக நான் தனித்து
தவமிருந்தேன். சில
கள்ளப் படை வந்து கதவு யன்னலைக்
கவர்ந்தன பார். பின்பு
கூரை பிரித்தெடுத்தார் என்
அழகையும் உருக்குலைத்தார்.
நாசமறுவார் சிலர் வந்து
நடுவீட்டில் மதுக் குடித்தார்.
சில மோச ஆசாமிகள் வந்து
கஞ்சா கசிப்படித்தார். நான்
நொந்து நூலாகி பெரும்
துன்பத்தில் துவண்டிருந்தேன்.

பட்டப் பகல் ஒரு நாள் அந்த
துட்ட இளைஞனுடன் ஒரு
பெட்டைக் கழுதை வந்தாள்.
அவசரக் காதல் அது மிக
அவசரம் படபடப்பு ஐயோ!
கெட்ட குடி மக்கள் விரைந்து
ஆடையகற்றி... சீச்சீ....
அவசரம் அவசரம் தான்.
நீண்டது தொடர் கதையாய்
தீண்டல்கள் தீயானது....

பெட்டைப் பிள்ளை ஒருநாள்
பெரிதாய் அழுது நின்றாள்
அவன் நெட்டை மரமாக நின்று
ஏதேதோ கொதித்தாடினான்..பின்பு
ஒரு முடிவுக்கு வந்தவராய்
முத்தம் கொடுத்தனர் முகஞ்சுழித்தேன்.

இரக்கம் எதுவுமின்றி
கருக் கொலையை செய்துவிட்டு ஒரு
காகிதத்தில் சுற்றியே என்னை
உரசிநிற்க எறிந்து நின்றார்.
காகம் கொத்திக் கிழித்ததப்பா
நாய்கள் பிய்த்து எறிந்ததப்பா
கேடு கெட்ட காமக் காதல் கண்டு நான்
குமுறிக் கொதித்த துயர் இந்த
குவலயம் அறியுமப்பா.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹