கரும்பெல்லாம் இரும்பாகி சுட்டெரிக்கும் மாயம் இது. 💤💤💤💤💤💨💨💨💤💤💨💨



நேற்றுவரை மன மலையில்
ஏற்றம் கொண்ட மாளிகையை
காற்று வந்து சுழன்றடித்து
முறித்தடித்த கனதியினால்
கதவுகளும் உடைந்தனவே
பாழடைந்த வீடாக மன வீடும் ஆனதுவே.

சூறாவளி ஓய்ந்த பின்பும்
ஆறாவலி சுமந்து விழிநீர்
தாராய் உகுந்துதிர்க்க
வேரோடு மணம் கமழும் உன்
நினைவுகளே நிறைந்திருக்கு.

தேமாப் பூவின் வாசனை உன் நினைவு.
தேம்பும் உடல் உருக்கில்
வலிந்திழுக்கும் மெய்யுணர்வு.
வதனமிழந்த வதைப்பு.
வார்த்தைகளால் கோர்க்க முடியா
தொகுப்பு.

இயந்திரமாய் கழற்றி மாற்றும்
இதயம் இருந்திருந்தால்
சூறாவளி என்ன....! சுனாமி வந்தாலும்
புதிதாய் ஒன்றைப் பூட்டிடலாம்.

நினைவுக் கோர்வைகளை மறக்க
மாத்திரைகள் கண்டிருந்தால்
பெருகும் துயரலைகள்
கரைந்தோடிப் போயிருக்கும்.

இயல்பாய் இருப்பதென நடிக்கவும் முடியுதில்லை.
இனியொரு விதியென எழுந்திடவும்
முடியுதில்லை.
பெருந்துயரைப் புதைத்து விட்டு நகரவும்
முடியுதில்லை.
ஏனிந்த துயரென்று தவிக்காத நாளுமில்லை.
எரிமலைக் கொதிப்பாக
விழிநீரும் ஓயுதில்லை.
கரும்பெல்லாம் இரும்பாகி
சுட்டெரிக்கும் மாயம் இது.
மீண்டிடத் தான் துடிக்கிறது இதயம்.-தவறி
மாண்டாலும் கொன்றவர்கள்
வந்திடாதீர் பிணமாகி அடங்கி
அமைதியுறும் முகம் காண.

வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹