சுகம் நிறைந்தவள்.......

வானமகள் ஜாலம் காட்டிக் குதூகலிக்கும் ஒரு இளமாலைப்பொழுது. மெல்லிய கீறலாய் இளம்பிறை சிவந்து சிரித்துக் கொண்டிருந்தது. கடற்கரைக்காற்று இதமாகத் தேகத்தில் புரண்டு மனதைச் சீண்டிக்கொண்டிருந்தது.

நினைவுகளும் இனிமையாகி.....

விநாடிகள் துரிதகதியில் பறந்து நிமிடங்களைத் தொட்டுவிடும் துடிப்பில் இயங்கிக்கொண்டிருக்க, நானும் அவளது நினைவுகளை மீட்டு ரசித்துக்கொண்டிருந்தேன். அவளைப் பார்த்து இன்றுடன் மூன்று நாட்களாகி விட்டன. இன்னும் சில தினங்களில் அவளை மீண்டும் பார்க்க முடியும். அவளைப் பிரிவதென்பது ஏக்கமான வாழ்க்கையே.
   
      சொல்லும்படியாக அவள் பேரழகியல்ல. ஆனாலும் பார்த்தவர் மயங்கும் அழகு விழிகள். சுட்டியிழுக்கும் வசியப் பார்வை. அப்பப்பா....அந்தக் கண்களுக்குத்தான் எவ்வளவு சக்தியடா!  கறுப்போ சிகப்போ மா நிறமோ என்று கூறமுடியாத ஒருவித அழகு. அலையலையாக முன் நெற்றியைத் தொட்டாடும் சுருண்ட கூந்தல். அழகான சிணுங்கல் சிரிப்பு. பார்த்தவர்கள் வியக்கும் உடல்வாகு. இத்தனைக்கும் சொந்தக்காரி சுகநிதா.
   ****
இயந்திரமாய் சுழன்று அலுவலகக் கதிரைக்கு விடை கொடுத்து, பேருந்தில் புதைந்து, அலுத்துக் களைத்து வீடு போய் அவளது புன்னகையைத் தரிசித்தால் ... அடடா!  களைப்புப் பறந்திருக்கும். வியர்வையில் குளித்திருக்கும் என்னை எதுவித அருவருப்பும் இல்லாமல்,  நான் மறுக்க மறுக்க மெல்லிய பற்களால் கடித்து முத்தமழை தந்திடும் அதிசயப் பிறவியவள்.
****
ஒரு மாலைப்பொழுதில் வயல் வரம்புகளிற்கூடாக சைக்கிளில் அவளையும்  ஏற்றிப் பயணித்தேன். பறந்து செல்லும் கொக்குகளையும்,நீர்க்காகக்கைகளையும், வயற்புறப் பசுமைகளையும் ரசித்துக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.வயல் வரம்புப் பயணம். கொஞ்சம் சறுக்கினால் வயலுக்குள் விழுந்துவிடும் அபாயம். ஆனாலும் அவளது அருகாமை எனக்குப் புதுவித சுகத்தைத் தந்தது. திடீரென்று வரம்புக்குக் குறுக்காக பாம்பு ஒன்று படுத்திருப்பதைக் கண்டுவிட்டேன். மெல்ல "பிரேக்" போட்டு, சாதுரியமாக இறங்கியபொழுது தான் அவளிடமிருந்து இந்தக் கேள்வி வந்தது.
"பாம்பென்று நினைச்சிட்டீங்களோ..? அது தடி..." என்று கலகல எனச் சிரித்தாள். அவளது சிரிப்புக்கு ஏற்றமாதிரி நெல்மணிகளும் அசைந்தாடின. நிலவும் மெல்லத் தலைகாட்டிச் சிரித்தது. அவள் தடி என்று சொன்னாலும் நான் அதனை நம்பவில்லை. உன்னிப்பாகப் பார்த்தேன். தடிதான். இருந்தாலும் நான் ஏமாந்த விடயத்தை அவளுக்குத் தெரியப்படுத்த விரும்பவில்லை.
" நல்லாப் பயந்திட்டீங்களா?  எனச் சொன்னவள் என் தலையைத் தடவி முத்தங்களை வாரி வழங்கினாள்.அது எனக்கு இனிமையாக இருந்தது.
***

கடல் அலைகள் நுரை தள்ளிப் பாய்ந்து என் கண்மணிகளில் சிந்தி எரிவை ஏற்படுத்தின. சுயநினைவு பெற்று கண்களைத் துடைத்து பிறைச்சந்திரனைப் பார்த்தேன்.அது கூனல் விழுந்த கிழவியைப் போல காட்சி தந்தது.
******
சுகநிதாவுக்கு நிலவு என்றால் விருப்பம்.ஒரு நாள்.....
நல்ல முழுமையான நிலவு நாள்.
அவளுடைய அருகாமையும், கட்டிப்பிடித்து மாறி மாறித்தரும் முத்தங்களும், நான் அவளுக்கு வழங்கும் முத்தங்களும் எண்ணில் அடங்காதவை.
அவளுக்குச் சோறு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தேன். இந்த வாயிச் சோறு பூனைக்குட்டிக்கு.அவள் வாய் திறந்து அதை வாங்கினாள். மான் குட்டிக்கு....
முயல் குட்டிக்கு...
கன்றுக் குட்டிக்கு.....
அவளுக்கு வயிறு நிறைந்திருக்க வேண்டும்." இது புலிக்குட்டிக்கு' எனச் சொல்லி சோற்றை வாய்க்கருகில் கொண்டு சென்றேன்.
" அதை இறக்கி விடுங்கோ அது நடந்து போகட்டும் " என்றாள்.
எனக்குச் சிரிப்பு ஒருபுறம்.அவளது தந்திரமான பதில் இன்னொரு புறம் மலைப்பையும் ஏற்படுத்தியது.

    சுகநிதாவுக்கு மூன்று வயது என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்.

(12 செப்டம்பர் 2010 சுடரொளியில் வந்த எனது சிறுகதை)

வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா
Latha kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹