நினைவுகளின் ஓட்டம்


என்றும் இணைந்திடாத தண்டவாளங்களை
காந்தச் சில்லுகள் ஏறித்தழுவுது.

டக் ..டக் ...
டொக் ....டொக் ...என்று
இரவுக் காற்றிலே மிரட்டும்
பூதத்தின் புதிய ராகமாய்
இரும்புத் தாளங்களிலும்
விழிகள் தம்மை மறந்து
தழுவுது உறக்கத்தை.

தலைவிரி கோலமாயும்
கரும் பூதங்களின்
தலை தெறித்த ஓட்டமாயும்
மரங்களும் ஓடுது.
வான் நிலவும் ஓடுது.
மேகங்களும் ஓடுது.
புகையிரதமும் ஓடுது முன்னோக்கி...
மனமும் ஓடுது.... பின்னோக்கி...

பிள்ளைப் பருவத்தில்
வேண்டாம் பேருந்துப் பயணம்
என அடம் பிடிப்பேன்.-அந்த
அடத்துக்கு பொருள் காண
அம்மா பட்ட பாடு ஏராளமே.

பேருந்து ஒருபக்கம் சரிந்தோடினால்
நான் மறுபக்கம் ஓடிக் குதிப்பேன்.
எந்தன் ஓட்டமும் ஆர்ப்பாட்டமும்
பேருந்துப் பயணிகளுக்கு
தொல்லை தொல்லை.

அம்மா ஆத்திரத்தில்
அடி போட்டுக் காரணம் கேட்டதற்கு
அன்று எந்தன்
மழலை அறிவு இதுவானது..

"பேருந்து ஒருபக்கம் சரியுதென்றால்
அங்கு பாரம் கூடிச் சரியுதம்மா.
நான் மறுபக்கம் துள்ளிக் குதித்தால்
பாரம் சமப்பட்டுப் போகுமம்மா."

அழுதமுகம் துடைக்காமலே
அம்மா ஆரத்தழுவியென்னை
முத்தத்தால் நனைத்து நின்றாள்.
அடித்த நோவும்
மாயமாய் பறந்தோடிற்று.

புகையிரப் பயணத்திலே- அந்த பிரச்கனைகள் வந்ததில்லை.
அது சரியாது.
சத்தம் செய்யும்
அந்த சத்தத்திற்குப் பயமும் இல்லை.

மின்மினியாய் ஆங்காங்கு
தொட்டுத் தொட்டு மின்னுது
மின்குமிழ்களும் .........
நினைவுகளும்............
ஆரோகண அவரோகண
இராக தாளத்தோடு
புகையிரதம் நகர்கின்றது.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹