பூக்களின் மெல்லிசை.



அடர்ந்த காடும்
அனல் நிறைந்த இருளும்
நிசப்தங்களை சல்லடையிட்டு
நெஞ்சைப் பிளக்கும்
அநாமதேய ஒலிகளும்.....
ஏதேதோ பயத்தை விதைத்தது.

தேக மரப் பொந்தில் பதுங்கிய
வாழ்தல் பறவையின்
இடைவிடாத பற்றிப்பிடிப்பில்
ஒரு வெளிச்சக் கீற்றை
தேடித் துலாவியது மனச்சிறகு....

தவழ்தல்..... ஊர்தல் ....என
தளராத நீள்பயணத் தேடலில்
இரத்தமும்  நிறமற்று
இருளோடு இருளாய்......
இடைவிடா நகர்வு....
இடைவிடா முயற்சி....
இருந்தும் ஒளியில்லை
வாழ்வோ வலிகளின் முனகலாய்...

நம்பிக்கைச் சிறகை
அசைத்தது மனது.
இதோ... இதோ.... ஒரு பிடிமானம். தட்டுத்தடுமாறி தடவிய தேடலில்
கையில்  உராய்ந்த -அந்த
கரும்பாறைப் போர்வையைப் பற்றி
சற்று எட்டி எக்கி
தலை நிமிர்த்த போது
கூனல் பிறையொளியின்
குவிந்த சிரிப்பில்
அக்கரை தெரிந்தது அழகாய்...

ஆற்றோடு ஒரு அழகிய தீவு
அங்கே அழகான
பூங்கொடிச் சோலை-அவை
வதனங்கள் தலையாட்டி அழைக்க
சித்தம் மறந்தாங்கு
அருகிடைப் போனேன்.
அவை மெல்லிசை பாடின காதில்
"கவிஞனுக்கு மரணமில்லை
மரணமில்லை என்று......"

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

Comments

Post a Comment

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹