நிலாச்சோறு.



இரவை அழகூட்டும் முழுநிலா
அற்புத விளக்காக..... வானிடை
மெல்லிய ஒளி ஏந்தி
இயற்கைக்கு சந்தணம் பூசிநிற்கும்.

அருவியாய் மேவி மேவி -முகில்
அலைகள் ஓடித்துள்ளும்.
நட்சத்திர மீன்களாக உடுக்கள்
கண்சிமிட்டிக் காதல் செய்யும்.

வானின் அற்புதங்கள் காட்டிக் காட்டி
அம்மா நிலா ஒளியில்
சோறூட்டுவாள்.-நான்
வெண்மணல் மீதிலே
நல்ல வீடுகள் அமைத்திடுவேன்.
ஒரு பொன்விழாப் புன்னகையாய்
புவியும் பூரிப்பில் குளிர்ந்திருக்கும்.

அம்மா இடுப்பிலும் கையிலுமாய்
என்னை இறுக்கிப் பிடித்ததில்லை.
ஒரு சுதந்திரப் பறவையாக- அந்தப் பெருவெளி முற்றமெங்கும்
சிட்டாய் பறந்துமே ஓடிடுவேன்.

ஒரு கவளச் சோறுண்டிட
நான் செய்யும் பெரும்
விளையாட்டு அவஸ்தைகளை
ஒரு விளையாட்டு நிகழ்வாக்கியே
அம்மா வெற்றிகள் கண்டு நிற்பாள்.

நல்ல விளையாட்டாய் அமையுமந்தப்
பொழுதுகளும் பேரின்பமே.
எந்தன் அம்மாவைப் போலவே தான்
இன்று அமைதியாய் நான் வெல்கிறேன்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா.

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹