மூட(ரின்) நம்பிக்கை.

குழந்தையின் கழுத்துப்பகுதியில் காணப்பட்ட நீர்த்தழும்பை கண்டு பதறிப்போனாள் துர்க்கா.
" அக்கி" என்று புகுந்த வீட்டில் இருந்த வயோதிபர்களும் அயல்வீட்டு வயோதிபங்களும் கூடிக்கதைத்து
 "ஏதோ அம்மன் கோபம் கொண்டிட்டா"  எனப்பேசிக்கொண்டனர்.
     
       குழந்தைக்கு உடம்பும் கொதிக்கத்தொடங்கியிருந்தது நிலமை எப்பிடி இருக்கும் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் வலியும் வேதனையோடும் தாயை விட்டு இறங்காமல் குழந்தை ஒட்டிக்கொண்டதால் வீட்டு வேலைகளை செய்வதற்கு துர்க்காவால் முடியவில்லை.
"அழுதாலும் அவளே தான் பிள்ளை பெறவேணும் " என்பதற்கிணங்க பரபரப்பாக வீட்டு வேலைகளை  ஓரளவு முடித்துக்கொண்டு  யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு பேருந்தைப்பிடித்து எட்டு மணிக்கிடைல போவதே அவளுடைய எண்ணமாக இருந்தது. மணியோ விரைந்தோடி ஏழரை காட்டியது. புறப்பட்டு விட்டாள். வீட்டைப்பூட்டி வெளியேறியவளிடம்

" பரியாரியாரிட வீடு தெரியுமோ? "
என புகுந்தவீட்டு வயோதிபமாது வினவினாள்.

" எதுக்கு பரியாரிட வீடு? நான் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு போறேன்"
 எனக்கூறி புறப்பட வெளிக்கிட்டவளை சொற்கணைகள் தாக்கத்தொடங்கின.

 " நானும் எட்டுப்பிள்ளையை பெத்தனான். அக்கி வந்தால் பரியாரிட்ட போனால் சிங்கம் கீறி விடுவார். மூன்று நாளைக்கு காலமைல போய் கீற மாறிடும்.  வைத்தியசாலைக்கு போனால் அம்மன் குற்றம் கூடிடும் "
      என அந்த வயோதிபமாது அவளது குடும்ப வைத்தியர் அம்மன் புராணம் வாசிக்கத்தொடங்கினாள்.

"அட கடவுளே!  இப்படியும் முட்டாள் சனங்களா?  ஏதுமறியாத குழந்தை மீது கோபம் கொள்ளும் கடவுள் எல்லாம் கடவுளாக இருக்க முடியுமா?  "
       என நினைத்தவாறு வயோதிபத்தின் புலம்பலை பொருட்படுத்தாமல் பேருந்தைப்பிடிக்க ஓட்டமும் நடையுமாக விரைந்தாள் துர்க்கா.

   இதோ! பேருந்துத்தரிப்பிடத்தை   நெருங்கி விட்டாள். பேருந்து ஒன்று விரைந்து வந்து கொண்டிருந்தது. கையசைத்து நிற்பாட்டும் சமிக்ஞையை வழங்க பேருந்தும் நின்றது. அதேவேளை கீரீச் என்ற வேகத்தடையோடு அவளருகே மணிவண்ணன் மோட்டச்சைக்கிளை கொண்டுவந்து நிறுத்தி
 " ஏறுங்கோ. "
         என கட்டளையிட்டுவிட்டு பேருந்தைப்போகுமாறு கையசைத்தான். அது கோபத்தை உமிழ்ந்தெறிவது போல புகையைக்கக்கிக் கொண்டு நகரத்தொடங்கியது.
 
கணவனின் மோட்டச்சைக்கிளில் ஏறி அமர்ந்தவளுக்கு வைத்தியசாலைக்குப்போகாமல் வேறு திசையில் வாகனம் செலுத்தப்படுவது கோபத்தை தந்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டாள்.
வராலியம்மன் கோவிலுக்கு வலக்கைப்பக்கமாக இருந்த பரியாரியின் வீட்டின் முன் மோட்டடச்சைக்கிள் நின்றது.
பரியாரியார் நீண்ட நரைத்த தாடியோடு காணப்பட்டார். அவரது தோற்றத்தைப்பார்த்த போது துர்க்காவுக்கு நவாலியூர் சோமசுந்தரப்புலவர் தான் ஞாபகத்திற்கு வந்தார்.

" என்ன பிரச்சனை "
என பரியாரியின் அசண்டையினமான கேள்வியில் சோமசுந்தரப்புலவர் மறைந்து பொல்லாத ஒரு உருவம் வந்து அவள் மனதில் குந்திக்கொண்டது.

" பிள்ளைக்கு அக்கி"
என அடக்க ஒடுக்கமான மாணவனைப்போல நெளிந்த கணவனைப்பார்க்க வேடிக்கையாக இருந்தது துர்க்காவுக்கு. அவனுடைய இயல்பு அதுவல்ல என்பது அவளுக்குத் தெரியும். பணிவும் சொல்வதைச் செவிமடுத்துக் கேட்கும் திறனும் அற்றவன் மணிவண்ணன். தானும் தன் குடும்பத்தில் உள்ளவர்களுமே அவனது கிணற்றுத்தவளை ராட்சிய உலகில் உயர்வானது. நிறையப் படித்திருந்தான். ஆனால் மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கிக்கிடந்தான்.
           துர்க்காவை மணிவண்ணன் விரும்பித்தான் திருமணம் செய்தான். விரும்பும் காலத்தில் அவளது முற்போக்குச் சிந்தனையான பேச்சுக்களை கைதட்டி ரசித்த ரசிகன் அவன். ஆனால் திருமணம் என்ற பந்தத்திற்குள் வந்தபிறகு தான் துர்க்கா அவனது சுயரூபம் கண்டு திகைத்தாள் . வரக்கூடாத இடத்திற்கு வாழ்க்கைப்பட்டு வந்ததை நினைத்து வெந்து அழுதாள். காலங்கள் நகர மாற்றிவிடலாம் என நினைத்தாள். ஆனால் நாய்வாலை நிமிர்த்துவதும் மணிவண்ணனைத் திருத்துவதும் ஒரே தன்மை என்பதை அறிந்து விதியை மனதால் திட்டித்தீர்த்தாள்.

   பரியாரியார் சிவப்பு காவியால் குழந்தையின் முகத்தில் சிங்கம் எனச்சொல்லி ஏதோ ஒரு பூனை வடிவத்தை வரைந்து கொண்டிருந்தார். தூரிகை படும் போதெல்லாம் குழந்தை கூச்சத்தால் நெளிந்தது.
சிங்கம் வரைந்ததற்கு நூறு ரூபாயை கொடுத்து விட்டு விடை பெறும்போது

 " பிள்ளைக்கு காச்சல் காயுது. மருந்து தாங்கோ "
என பரியாரியிடம் கேட்டாள்.

"சிங்கம் கீறியாச்சு. நீங்க போகலாம் " எனக்கூறிவிட்டு   உள்ளே சென்றதந்த தாடிபோர்த்த கேடியுருவம்.

        இரண்டாம் நாள்,  மூன்றாம் நாள் சிங்கம் வரைவதற்காக முழுகி முழுகி துர்க்காவுக்கு தடிமனாக்கியதே தவிர குழந்தைக்கு அக்கி மாறவில்லை. கழுத்து,  முதுகு , கை என அக்கி பரவி குழந்தை வேதனைப்பட்டது.
நான்காவது நாள் துர்க்காவுக்கு கடும் காச்சல். தனியார் மருத்துவமனைக்கு அவளை அழைத்து சென்று மருந்தெடுக்கப்போவதாக கூறியபோது, அதை மறுத்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்லுமாறு அடம்பிடித்தாள்.
         தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து மருந்தெடுப்பது யாழ்ப்பாணத்தாரின் பகட்டில் ஒரு விடயமாகும். துர்க்காவுக்கு அதில் விருப்பில்லை. எந்த மருத்துவமனை சென்றாலும் இறுதியாக பெரியாஸ்பத்திரிக்குத்தான் போக வேண்டும் என்பது அவள் அனுபத்தில் அறிந்த விடயம்.

          பெரியாஸ்பத்திரியில் வெளிநோயாளர் பிரிவில் தன் பெயரைப்பதிந்து சிட்டையை வாங்கிக் கொண்டாள். பிள்ளையோடு வரிசையில் மருந்தெடுக்க காத்திருந்தாள். மணிவண்ணன் குழந்தைக்கு பிஸ்கட் வாங்க கடைக்குச்சென்ற சமயம் பார்த்து மிக வேகமாக குழந்தைப்பிள்ளைகளை பார்வையிடும் பகுதிக்கு பிள்ளையைக்கொண்டு ஓடினாள்.
அவளுடைய அதிஸ்ரம் அன்று குழந்தைப்பிள்ளைகளைப் பார்வையிடும் இடத்தில் வைத்தியர் மட்டுமே இருந்தார். வரிசையில்லை. நேரடியாக அவள் குழந்தையோடு உள்ளே அனுமதிக்கப்பட்டாள். திரும்பிப்பார்த்தாள். மணிவண்ணன் அவளை நோக்கி வேகமாக வருவது தெரிந்தது.

        அவள் வைத்தயருக்கு முன்னே அமர்ந்தாள். போர்வையை விலக்கி தன் குழந்தையின் நிலையை காட்டினாள்.
வைத்தியர் கேட்ட முதல் கேள்வி

" சிங்கம் வரைய கொண்டு போனீர்களா?  "

சிங்கம் கீறுறது தான் சரியாக இருக்குமோ? என அவளது அபலை மனம் ஒருகணம் நினைத்துக்கொண்டது.

" ஓம் " என்றாள்.

"படித்தபிள்ளை போல இருக்கிறீர்.
  சிங்கம் கீறினால் அக்கி மாறும் என்று யாருங்களுக்கு சொன்னது?
என்ன படிச்சிருக்கிறீர்?  " என அடுக்கடுக்காக கேள்வி கேட்பதிலிருந்து வைத்தியர் நல்லா திட்டப்போறார் என்பதை துர்க்கா புரிந்து கொண்டாள்.

" நான் ஒரு பட்டதாரி. எனக்கு சிங்கம் கீறினால் மாறாதென்று தெரியும் சேர். வெளிலயும் ஒரு பட்டதாரி நிற்கிறார். அவராலை தான் குழந்தைக்கு இவ்வளவு துன்பம். அவரை கூப்பிடுங்கோ "
என்று சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டாள் துர்க்கா.

    வாசலில் நின்ற தாதியின் அழைப்பை ஏற்று உள்ளே வந்தான் மணிவண்ணன்.
வைத்தியரின் முன்னே அமர்ந்து கொண்டான்.

" சிங்கம் கீற கூட்டிக்கொண்டு போகாமல் இஞ்ச ஏன் கூட்டியந்தனீர்?  "
என வைத்தியர் கேட்ட கேள்வியில் உற்சாகமடைந்தான் மணிவண்ணன்.

  " நான் என்ன செய்வது ? சொன்னால் கேட்டால் தானே ? தனக்கு மருந்தெடுக்க என்றிட்டு பிள்ளைக்கு பிஸ்கேற் வாங்கப்போன சமயம் பார்த்து இஞ்ச வந்திட்டா. "
என ஏதோ பெரும் குற்றம் புரிந்தவள் போல அவள் மீது பழிபோட்டான்.

" எத்தினை நாள் சிங்கம் வரைஞ்சனீங்கள்?  " என்றார் வைத்தியர்.

" மூன்று நாள் வரைஞ்சாச்சு " என்றான் அவன். வைத்தியர் அவனையே பார்த்திருக்க அவன் தொடர்ந்தான்.

" மூன்று நாள் வரைஞ்சும் இன்னும் காயேல்லை. இண்டைக்கு நாலு நாள். இனி நாளைல இருந்து திருப்ப மூன்று நாள் வரைய காஞ்சிடும். "
என மேதாவி மோல பதிலளித்தான்.

" கெட்டிக்காரன். என்ன படித்திருக்கிறீர்?  "

"வணிகமானி "

" யார் சிங்கம் கீறுறதுக்கு போக சொன்னது"

"என்ர அத்தை "

"அவாவுக்கு எத்தினை வயது "

"எழுபத்தைந்து"

" ஒரு அனுபவசாலி சொன்னதை கேட்காமல், நீர் பிள்ளையை இஞ்ச கொண்டந்திட்டீர் " என துர்க்காவைப்பார்த்து கேட்டார் வைத்தியர்.

அவள் என்ன சொல்வதென தெரியாது திகைத்தாலும் சமாளித்தபடி

" நவீன மருத்துவத்துறை வளர்ச்சில அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர்கள்.அக்கிக்கும் மருந்து கண்டு பிடித்திருப்பார்கள் தானே. அது தான் எனக்கு மருந்தெடுப்பதாக கூறி பிள்ளையை கொண்டு வந்தனான். பிள்ளைக்கு காச்சலும்....."
 என கண்கலங்கினாள் துர்க்கா.

" தம்பி பழசுகள் சிங்கம் கீறச்சொன்னால் நம்பீடுவீரா?  ஏன் புலியும் கீறச்சொல்லுவினம் கொண்டு திரியுமன். பாலூட்டுற தாய் அடிக்கடி முழுகினால் பிள்ளைக்கு சளி பிடிக்கும் என்றது கூட தெரியாதா?  படிச்சவன் மாதிரியா யோசித்திருக்கிறீர். உங்கட மூடநம்பிக்கைக்கு பிள்ளையா பலிக்கடா?  "
      வைத்தியர் பேசப்பேச மணிவண்ணனின் தோள்ப்பகுதி பதிந்து
       சுருங்கிக்கொண்டதைப் பார்க்கப்பார்க்க துர்க்காவுக்கு உள்ளூர ஆனந்தமே பரவியது.

    வைத்தியர் குழந்தைக்கு ஒரு ஊசியும் போட்டு வெளியிலும் மருந்து வாங்க எழுதிக்கொடுத்தார்.
வைத்திய ஆலோசனைப்படி உள்மருந்தையும் வெளியில் பூசக்கொடுத்த களிம்பையும் துர்க்கா மறக்காது கடைப்பிடித்தாள். இரண்டாம் நாள்  முற்று முழுதாக குழந்தை சுகமடைந்தது. அக்கியின் தடங்கள் மாற காலம் எடுக்கும் என்பது அவளுக்குத் தெரியும். வலிகள் மறந்து குழந்தை இயல்பாகச்சிரித்து விளையாடியது. அந்தச்சிரிப்பு மூடநம்பிக்கை யை தகர்த்தெறிந்த அழகியல் சிரிப்பாக துர்க்காவுக்குத் தோன்றியது.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹