ஒரு காதலின் முகாரி


----------------------
அன்பே!
உன் விழியும் மொழியும்
தொட்டுத் தொட்டுத் தீண்டிய இன்பத்தில்
இலவம் பஞ்சானது மனச்சிறகு.

காதல் படகில் இனிய பயணம்....
கனிந்த உன் சொற்களில்
பலாச்சுளை வாசனை ....
கனவிலும் உன் திருமுகம் காண்பதால்
கண்களுக்கு  இன்ப நுகர்ச்சி.....
மௌன ராகத்தில் மலர்ந்து புதைந்து
மயங்கிக் கிடந்தேன் நிலை மறந்து...

அலையடித்த காதல் சுமந்து
கோவில் பக்தனாய் தேடித்தேடி
உன் தரிசிப்பை பெறுவதற்கு
காரணங்கள் பலநூறை சோடித்தேன்.
சொர்க்கமே நீ என சுற்றி வந்தேன்.
காவியக் காதல்கள் பொய்யல்ல
உன்னால் உணர்ந்து கொண்டேன்.

என்னைக் காணும் போது உன்
கண்களிலும் காதலிருந்தது.
நீ பேசும் போதும் உன் குரலில்
காதல் இருந்தது.
உனது இதயத்துடிப்பில் எனக்கான
காதல் துடிப்பிருந்தது.
யார் மீதுமில்லாத கரிசனையில்
என் மீதான காதலை உணர்த்தினாய்.

இப்போதெல்லாம் உனக்கு
என்னை நினைக்கக் கூட நேரமில்லை.
பேசாதே என்றாய் .....
பார்க்காதே என்றாய்.....
அருகிலிருந்தும் அந்நியரானோம்.
ஏவல் சக்திகளின்
நூல் பொம்மை நீயானாய்.

உன் வேண்டுதல்களை ஏற்று
உன் மகிழ்வில் களிகூர்ந்தேன்.
மௌனங்கள் நிரந்தரப் பரிசானது.
நவீன இயந்திரக் கடல்களாய் கண்கள்.
உனக்கான வேண்டுதல்களை
தந்த திருப்தியில்
யாருக்கும் தெரியாமல் இதயம்
முகாரிகளை முணுமுணுக்கிறது.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹