பிறப்பிக்கும் இறைவிகளை சிறப்பாக மதியுங்கள்.

பெண் என்ற பெரும் படைப்பு கடவுள் தந்த வரம். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பெண்ணாகப் பிறந்ததை சாபமாக கருதினாலும் ஒரு பிள்ளையைப் பெற்ற பின்பு வரும் அலாதிப் பிரியமும் வாழ்வின் மீதான பிடிப்பும் ஆச்சரியப்படத் தக்கது. இது பெண்மைக்குக் கிடைத்த வரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. குழந்தை வயிற்றில் உருவாகும் போதே அதன் எதிர்காலம் குறித்து உள் மனதில் வரைபடம் அமைப்பவள் பெண். ஆண்கள் வெளிப்படையாக சொல்லிக் கொண்டாலும் பெண்கள் அப்படி இல்லாமல் மனதில் கனவு சுமந்து கருவில் சிலை செதுக்கும் அதிசயச் சிற்பி பெண். புதிதாகத் திருமணமாகி முதற் குழந்தை கருவாகும் போது பெண்ணின் உடல்நிலையில் சடுதியான மாற்றங்களை உணர முடிகிறது. இதுவரை சாதுவாக இருந்த பெண் முரண்பட ஆரம்பிப்பாள். திருமணத்தின் முன்னர் விரும்பி உண்ணாத உணவுகளை விரும்பி உண்ணுவாள். ஒருவிதமான பிடிவாதம் நிலைத்திருக்கும். தன்னை மட்டுமே கணவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலை இருக்கும். இந்த மாற்றங்களுக்கு காரணம் புதிதாக அவளுடலுக்குள் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் என மருத்துவ உலகமும் உறுதி செய்கிறது. ...