சுகம் நிறைந்தவள்.......

வானமகள் ஜாலம் காட்டிக் குதூகலிக்கும் ஒரு இளமாலைப்பொழுது. மெல்லிய கீறலாய் இளம்பிறை சிவந்து சிரித்துக் கொண்டிருந்தது. கடற்கரைக்காற்று இதமாகத் தேகத்தில் புரண்டு மனதைச் சீண்டிக்கொண்டிருந்தது. நினைவுகளும் இனிமையாகி..... விநாடிகள் துரிதகதியில் பறந்து நிமிடங்களைத் தொட்டுவிடும் துடிப்பில் இயங்கிக்கொண்டிருக்க, நானும் அவளது நினைவுகளை மீட்டு ரசித்துக்கொண்டிருந்தேன். அவளைப் பார்த்து இன்றுடன் மூன்று நாட்களாகி விட்டன. இன்னும் சில தினங்களில் அவளை மீண்டும் பார்க்க முடியும். அவளைப் பிரிவதென்பது ஏக்கமான வாழ்க்கையே. சொல்லும்படியாக அவள் பேரழகியல்ல. ஆனாலும் பார்த்தவர் மயங்கும் அழகு விழிகள். சுட்டியிழுக்கும் வசியப் பார்வை. அப்பப்பா....அந்தக் கண்களுக்குத்தான் எவ்வளவு சக்தியடா! கறுப்போ சிகப்போ மா நிறமோ என்று கூறமுடியாத ஒருவித அழகு. அலையலையாக முன் நெற்றியைத் தொட்டாடும் சுருண்ட கூந்தல். அழகான சிணுங்கல் சிரிப்பு. பார்த்தவர்கள் வியக்கும் உடல்வாகு. இத்தனைக்கும் சொந்தக்காரி சுகநிதா. **** இயந்திரமாய் சுழன்று அலுவலகக் கதிரைக்கு விடை கொடுத்து, பேருந்தில் புத...